ATM இயந்திரங்களில் உதவி செய்வது போல் நடித்து மோசடி…!

வங்கிகளுக்கு அருகில் நின்றுகொண்டு, ATM இயந்திரங்களில் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவுவது போல் நடித்து, அவர்களின் வங்கி அட்டைகளைத் திருடி வந்த நபர் ஒருவரைத் தெற்கு களுத்துறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 11 வங்கி அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 30ஆம் திகதி தெற்கு களுத்துறை காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கடமை நிமித்தம் அரச வங்கி ஒன்றிற்குச் சென்றிருந்தபோது இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உடனடியாகச் செயற்பட்ட காவல்துறை அதிகாரிகள், வங்கிக்கு அருகிலேயே நடமாடிக் கொண்டிருந்த சந்தேக நபரை சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.

அவரிடமிருந்து அவருக்குச் சொந்தமில்லாத 11 வங்கி அட்டைகளும், வேறொரு நபரின் சாரதி அனுமதிப்பத்திரமும் மீட்கப்பட்டுள்ளன.

விசாரணையில், இந்த நபருக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றங்கள் தொடர்பாக பொலன்னறுவை மற்றும் வெள்ளவத்தை உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது போன்ற மோசடிகளிலிருந்து தப்பிக்க, ATM இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது முன்பின் தெரியாதவர்களின் உதவியைப் பெறுவதைத் தவிர்க்குமாறு காவல்துறையினர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.