எந்தவொரு தொழிற்சங்கத்தினதும் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியப் போவதில்லை!

எந்தவொரு தொழிற்சங்கத்தினதும் அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்கு அடிபணிந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 213 பேருக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவையில் நிலவும் மனிதவள பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, மக்களுக்குத் தரமான சேவையை வழங்குவதே அரசாங்கத்தின் முக்கிய இலக்காகும்.

வெளிநாடுகளில் அதிக வேதனம் கிடைப்பதாகக் கூறிக்கொண்டு, நாட்டை விட்டு வெளியேறப்போவதாக மிரட்டி வேதன உயர்வுகளைக் கோரும் எந்தவொரு தரப்பினரின் கோரிக்கைகளுக்கும் அரசாங்கம் அடிபணியப்போவதில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சுகாதார அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு முன்வராது மருத்துவர்கள், மீது சேறு பூச முயல்வதால், எதிர்வரும் முதலாம் திகதிப் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.