சூரிச்சில் சுவிட்சர்லாந்து வர்த்தக சமூகத்துடன் இலங்கை பிரதமர் சந்திப்பு

    (வேதாந்தி)

சுவிட்சர்லாந்தில் நடைபெறும் டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்துள்ள இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரிய, சுவிட்சர்லாந்து வர்த்தக சமூகத்தின் உறுப்பினர்களைச் சந்தித்து முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பு 2026 ஜனவரி 22ஆம் திகதி மதியம் 12.30 மணியளவில் சூரிச் விமான நிலையத்தில் உள்ள கேட்போர் கூடமொன்றில் நடைபெற்றது  இச்சந்திப்பில் தொழில் அமைச்சரும் நிதி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, உலக வர்த்தக அமைப்பிற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதித் தூதர் சமந்த விஜேசேகர உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலின்போது, இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம், நிலையான மற்றும் வெளிப்படைத்தன்மையுடனான பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டாவோஸ்–கிளாஸ்டர்ஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்தக் கூட்டத்திற்குச் சமாந்தரமாக, 2026 ஜனவரி 21ஆம் திகதி உலகப் பெண் மாளிகையில் நடைபெற்ற ‘World Woman Davos Agenda 2026’ நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர், தீர்மானங்களை எடுக்கும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் விலக்கப்படுவது கட்டமைப்பு சார்ந்த பிரச்சினையென குறிப்பிட்டார் என வெளியிடப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிரதமர் சுவிட்சர்லாந்தின் ஹமில்டன் மெடிக்கல் மற்றும் வேரியோசிஸ்டம்ஸ் நிறுவனங்களுக்கு விஜயம் மேற்கொண்டதோடு, தொழிற்பயிற்சி மற்றும் கல்வி தொடர்பான கலந்துரையாடல்களிலும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.

மேலும், 2026 ஜனவரி 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை பிரதமர் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சந்திப்பில் தொழில் அமைச்சரும் நிதி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவும் கலந்து கொண்டார்.

அதே நாளில், சிங்கப்பூர் குடியரசின் ஜனாதிபதி திரு. தர்மன் சண்முகரத்தினத்தையும் பிரதமர் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின்போது, சமீபத்தில் இலங்கையை பாதித்த ‘திட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து சிங்கப்பூர் வழங்கிய உதவிகளுக்காக நன்றியைத் தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.