(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளரும் மருதமுனை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவருமான அஷ்ஷெய்க் எப்.எம்.எஸ்.ஏ. அன்ஸார் மௌலானா, கடந்த டிசம்பர் மாதம் 31ம் திகதி கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதை முன்னிட்டு இறுதியாக விரிவுரையாளராக கடமை ஆற்றிய மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியில் (16) மகத்தான கௌரவம் வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி த. கணேசரெத்தினத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அஷ்செய்க் எப்.எம்.எஸ். அஹமது அன்ஸார் மௌலானா அவர்களின் கல்வித் துறை, சமூக சேவைகள் பற்றி விரிவுரையாளர்கள் இங்கு உரையாற்றியதுடன் பயிலுனமாணவர்களும் பல்வேறு நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தனர்.
இதேவேளை மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் விரிவுரையாளர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து மௌலானா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா வாசித்து
பொற்களியும் வழங்கி பாராட்டி கௌரவித்தனர். சேவை நலனை நினைவு கூர்ந்து விரிவுரையாளர்கள் பலரும் தமது அனுபவ கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கல்வியற் கல்லூரியின் உப பீடாதிபதி, இணைப்பாளர்கள், விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள், மௌலானாவின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.
அஹமது அன்ஸார் மௌலானா அவர்கள், 1982 ஆம் ஆண்டு பேருவளை ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வெளியேறியதுடன் பின்னர் பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பட்டப் படிப்பை மேற்கொண்டு 93 ஆம் ஆண்டு அரச சேவையில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.1999ஆம் ஆண்டு பட்டப்பின் கல்வி டிப்ளோமா பூர்த்தி செய்ததுடன் 2009இல் திறந்த பல்கலைக்கழகத்தில் ஆசிரிய கல்வித்துறையில் முதுமாணி பட்டத்தையும் பூர்த்தி செய்தார்.
பின்னர் 2015இல் ஆசிரியர் கல்வியியலாளர் சேவை நியமனம் கிடைத்து 5 வருடங்கள் அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சி கலாசாலையில் பணியாற்றினார். 2020 தொடக்கம் 22 வகையான காலப்பகுதியில் இரண்டு ஆண்டுகள் சம்மாந்துறை ஆசிரியர் வள மத்திய நிலையத்தில் வளவாளராக பணியாற்றி நிலையில் 2022ல் மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் விரிவுரையாளராக இணைந்து கொண்டார். தனது 60 வது வயதில் சுமார் 32 வருடகால கல்விப்பணியில், ஆசிரியராக ஆசிரிய வளவாளராக, விரிவுரையாளராக என பணியாற்றியதோடு பல்வேறு சமூக, சமயப் பணிகளில் ஈடுபாடு கொண்டு செயல்பட்ட ஒருவராவார்.
மருதமுனையின் மூத்த உலமாவான இவர், மருதமுனை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவராக, அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியின் பொது செயலாளராக, அம்பாறை மாவட்ட நழீமிய்யாக்கள் அமைப்பின் செயலாளராகவும் என சேவையாற்றியுள்ளார். பள்ளிவாசல்கள், சமய, சமூக நிறுவனங்களில் அங்கத்துவம் வகித்து சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அயராது பங்களிப்பு செய்த ஒருவராவார். தமது பிரதேசத்தில் நடைபெறும் எந்த நிகழ்வானாலும் அவை தேசிய ஊடகங்களில் வெளிவர வேண்டும் என ஊடகத்துறையினருடனும் ஊடகவியலாளர்களோடும் இணைந்து பங்களிப்பு செய்து பணியாற்றியவர். தேசிய பத்திரிகைகளில் தனது இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான கட்டுரைகளை எழுதி வரும் இவர் முஸ்லிம் சேவை வானொலி சிறப்பு பயான் நிகழ்ச்சிகளில் ஆர்வத்தோடு பங்கு பற்றி சமூக நல சிந்தனைகளை விதைத்து வருபவர்.
தனது மண்ணையும் இலக்கிய துறையையும் அதிகம் நேசிக்கும் இவர் இதுவரையில் சுமார் 500க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஜும்ஆ பிரசங்கங்களை நிகழ்த்தியிருக்கிறார். இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இவர் ஏனைய சகோதர சமூகத்தவர்களுடன் அன்புடன் பழகும் ஒருவராவார். இவரது ஓய்வு காலம் சிறப்பாக அமைய வேண்டும் என சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கல்வியலாளர்கள் என பலரும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளனர்.


