அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தடையைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனம் தனது தளங்களில் இருந்து சுமார் 5,50,000 கணக்குகளை முடக்கியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் நடைமுறைக்கு வந்த புதிய சட்டத்தின்படி, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் த்ரெட்ஸ் போன்ற தளங்களில் 16 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய சிறுவர்கள் கணக்கு வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்திற்கு இணங்கும் வகையில், அதன் முதல் வாரத்திலேயே மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் 3,30,639 கணக்குகளையும், பேஸ்புக்கில் 1,73,497 கணக்குகளையும், த்ரெட்ஸ் தளத்தில் 39,916 கணக்குகளையும் முடக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மெட்டா ஒப்புக்கொண்டாலும், இத்தகைய “போர்வைத் தடை” தீர்வாகாது எனத் தெரிவித்துள்ளது.
அதற்குப் பதிலாக, எப் ஸ்டோர் மட்டத்திலேயே வயதுச் சரிபார்ப்பைச் செய்வது மற்றும் பெற்றோரின் அனுமதிக்கு விதிவிலக்கு அளிப்பது போன்ற மாற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்தை மெட்டா வலியுறுத்தியுள்ளது.
இதுவே அனைத்து செயலிகளுக்கும் பொருந்தக்கூடிய நிலையான பாதுகாப்பை வழங்கும் என்றும் அந்நிறுவனம் வாதிடுகிறது.
பெற்றோரின் அனுமதிக்கும் வாய்ப்பளிக்காத அவுஸ்திரேலியாவின் இந்தச் சட்டம் உலகிலேயே மிகவும் கடுமையானதாகக் கருதப்படுகிறது.
இது பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, பிரிட்டன் போன்ற பிற நாடுகளும் இதைப் பின்பற்ற ஆர்வமாக உள்ளன.
இருப்பினும், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மனநல ஆர்வலர்கள் சில கவலைகளை முன்வைக்கின்றனர்.
சிறுவர்கள் தொழில்நுட்பக் குறைபாடுகளைப் பயன்படுத்தி இந்தத் தடையை எளிதில் மீறக்கூடும்.
தனிமையில் வாழும் சிறுவர்கள் அல்லது சமூக தொடர்புகள் தேவைப்படும் மாற்றுத் திறனாளி மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகச் சிறுவர்களின் இணையத் தொடர்பை இது துண்டிக்கும்.
முக்கியமாக, இணைய உலகின் யதார்த்தங்களை எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பைச் சிறுவர்களிடம் இருந்து இது பறித்துவிடும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


