அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் மற்றும் வட்டார அமைப்பாளர்கள் நியமனம்.

நூருல் ஹுதா உமர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்திற்கான கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, திருகோணமலை மாவட்ட மத்திய செயற்குழு செயலாளர், மாவட்ட மத்திய செயற்குழு அமைப்பாளர் மற்றும் வட்டார அமைப்பாளர்களுக்கான நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு (11) கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கட்சியின் தேசிய தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலில், கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் அவர்களின் ஒருங்கிணைப்பில், கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளரான அனீஸ் அவர்களின் தலைமையில் கட்சியின் செயற்பாட்டாளர் றிபாய் அவர்களின் ஏற்பாட்டில், திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களுக்குமான அமைப்பாளர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது, திருகோணமலை மாவட்டத்திற்கான அமைப்பாளராக கட்சியின் உயர்பீட உறுப்பினரான வைத்தியர் ஹில்மி முகைதீன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், அவருக்கான நியமனம் கட்சியின் தலைவர் மற்றும் தேசிய அமைப்பாளர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதேபோன்று, திருகோணமலை மாவட்டத்தின் மத்திய செயற்குழு செயலாளராக விவசாய போதனாசிரியர் அனீஸ் அவர்களுக்கான நியமனமும், கட்சியின் தலைவர் மற்றும் தேசிய அமைப்பாளர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கட்சியின் திருகோணமலை மாவட்ட நகர சபை மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள், உறுப்பினர்கள், வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.