அறுகம்பையில் உள்ள இஸ்ரேலர்களின் சபாத் இல்லத்திற்கு பூட்டு!

பொத்துவில் – அறுகம்பை பகுதியில் இஸ்ரேலியர்கள் வணக்க வழிபாடுகளுக்காக பயன்படுத்தி வந்ததாக கூறப்படும் “சபாத் இல்லம்” நேற்று (10) முதல் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டுள்ளது.

பொத்துவிலைச் சேர்ந்த தமீம் என்பவரால் சுற்றுலா ஹோட்டல் அமைப்பதற்காக விற்பனை செய்யப்பட்ட இந்தக் காணி, பின்னர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஒருவரால் பெறப்பட்டு ஹோட்டல் மற்றும் உணவகமாக இயக்கப்பட்டு வந்துள்ளது. அதேவேளை, இஸ்ரேலியர்கள் ஒன்று கூடும் இடமாகவும், வணக்க வழிபாடுகள் இடம்பெறும் இடமாகவும் இக்கட்டிடம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து, “சபாத் இல்லம்” தொடர்பாக அண்மைக்காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து, இந்த விடயம் சர்வதேச ரீதியிலும் பேசப்பட்டதுடன், அரசியல் வட்டாரங்களில் சூடுபிடித்த விவாதமாக மாறியது. குறித்த விடயம் பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டதுடன், நீதிமன்றம் வரை சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழ்நிலையில், காணியை வழங்கிய தமீம் என்பவரும் பல்வேறு விமர்சனங்களுக்கும், மக்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சத்திற்கும் முகம் கொடுத்திருந்தார்.

இவ்வாறான நிலைமைகளுக்கு முடிவுகட்டும் வகையில், தனிப்பட்ட முயற்சியின் மூலம் அதிக விலை கொடுத்து குறித்த காணியை மீண்டும் தமீம் மீளப் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, நேற்று குறித்த இடத்தில் காணியின் உரிமையாளர் தமீம் தலைமையில் பால் சோறு வழங்கல் மற்றும் துஆ பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில்,

முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித்,

சட்டத்தரணி சாதீர்,

பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.எம். முஷாரப்,

முன்னாள் உறுப்பினர் அப்துல் மஜீத்,

தேசிய மக்கள் சக்தியின் பொத்துவில் பிரதேச அமைப்பாளர் ஆதம் சலீம்,

பிரஜா சக்தி உறுப்பினர்கள், உலமாக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் சபாத் இல்லமாக இயங்கிய இடங்களில் முதற்தடவையாக மீளப் பெறப்பட்ட இடம் என அறுகம்பை சபாத் இல்லம் கருதப்படுவதுடன், அரசியல் பின்புலமின்றி தனிப்பட்ட முயற்சியால் இந்த விடயத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த தமீம் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிகழ்வின் போது கருத்துரைத்த தமீம்,

“இந்த இடத்தை வழங்கியதால் நான் சந்தித்த கஷ்டங்களும் விமர்சனங்களும் ஏராளம். இனி யாரும் இவ்வாறான இடங்களை விற்பனைக்கோ வாடகைக்கோ வழங்க வேண்டாம்”
என தெரிவித்தார்.

பல பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்தும் தீர்வு காண முடியாத ஒரு விடயம், தமீம் எனும் ஒரே நபரின் முயற்சியால் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.