எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
இன்று, Gem Sri Lanka கண்காட்சியில் பங்கேற்று இரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணத் துறையில் ஒரு நாடாக நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்நாட்டில் காணப்படும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறை அடைந்து கொண்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. ஆகையால், இந்த முன்னேற்றத்தை மேலும் மேம்படுத்த இந்தத் துறையில் பின்பற்றப்பட்டு வரும் விதிமுறைகளைத் தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் துறைக்கு பெற்றுக் கொடுக்க முடியுமான சகல வகையிலுமான ஊக்கங்களையும் பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பு சங்கிரி-லா ஹோட்டலில் இடம்பெற்ற Gem Sri Lanka கண்காட்சியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பார்வையிட்டார். இந்நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தத் துறையின் முன்னேற்றத்திற்காக, எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தியால் முடிந்த உட்சபட்ச ஆதரவைத் தருவோம். VAT வரியால் இந்தத் தொழில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதனால், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகள் மீதான விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும். நவலிபரல் வழியில் சென்று நமது நாட்டை இரத்தினக்கல் மற்றும் ஆரபணத் துறையின் கேந்திர மையமாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இப்போதாவது, கடந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, சட்ட மற்றும் ஒழுங்குவிதிகளில் காணப்படும் தடைகளை நீக்கி, முறையான அபிவிருத்தியை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.


