இன்றைய தினம் (09.01.2025) நடைபெற்ற பாராளுமன்ற கேள்வி–பதில் நேரத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வீதி அபிவிருத்தி தொடர்பான விடயங்களை முன்வைத்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அப்போது உரையாற்றிய உறுப்பினர், “ஏனைய மாவட்டங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தையும் ஒப்பிட முடியாது. மட்டக்களப்பு மாவட்டம் வாவியால் சூழப்பட்டு, படுவான்கரை மற்றும் எழுவான்கரை என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் உள்ள பாலங்களையும், இங்கு உள்ள பாலங்களையும் ஒன்றாகக் கருத முடியாது” எனத் தெரிவித்தார்.
மேலும், பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத் தீர்மானம் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத் தீர்மானம் அவசியம் என அமைச்சர் வலியுறுத்தி வருவதாகக் கூறிய அவர், “இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, அமைச்சருக்கும் வழங்கப்பட்டுள்ளன” என்றும் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பற்று பிரதேசத்தில் உள்ள சமுலையடி வட்டை என்ற பாதை 2024ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும், அந்த வீதியை அபிவிருத்தி செய்ய வேண்டுமென பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டபோது, அதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திலும் அந்தப் பாதை உடைக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், இதுகுறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பல தடவைகள் பேசியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், காக்காச்சி வெட்டை வீதியை அபிவிருத்தி செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், செயல்திறன் இல்லாத நடவடிக்கைகளின் காரணமாக அந்த நிதியின் ஒரு பகுதி மீண்டும் மத்திய அரசாங்கத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
“பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் தீர்மானங்களை எடுத்து, அவற்றை சமர்ப்பித்து, அமைச்சர்களுடன் பேசி, பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டபோதும், இன்று வரை போரதீவு பிரதேச மக்கள் அந்தப் பாதையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்” என அவர் வலியுறுத்தினார்.
இறுதியாக, “பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தீர்மானங்கள் தேவை எனக் கூறி, அவற்றைப் பெற்றுக்கொண்ட பின்னரும், கிடைக்கப்பெற்ற நிதியை பயன்படுத்தி வேலைத்திட்டத்தை நிறைவேற்ற முடியாத செயல்திறன் இல்லாத நிலை குறித்து நீங்கள் பொறுப்பேற்கிறீர்களா? அல்லது எமது மக்களை ஏமாற்றுகிறீர்களா?” என அமைச்சர் மீது நேரடி கேள்வி எழுப்பப்பட்டது.


