திருகோணமலையில் தீவிரமடையும் கடல் அரிப்பு!

திருகோணமலை, வீரநகர் பகுதியில் நிலவும் கடும் கடல் அரிப்பு காரணமாக கடற்றொழிலாளர்களின் வாடிகள் மற்றும் குடியிருப்புக்கள் பாரிய பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

இன்றைய (08) நிலவரப்படி நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள இந்த நிலைமை குறித்து வீரநகர் அன்னை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் வி. மனோகரன் கருத்துத் தெரிவிக்கையில், “சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாறானதொரு மோசமான கடல் அரிப்பை நாங்கள் எதிர்கொள்கிறோம். எமது கடற்றொழிலாளர் வாடிகள் பல அழிந்துவிட்டன, 4 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. கடற்றொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்ட இப்பகுதி மக்கள், கடல் கொந்தளிப்பால் தொழிலுக்குச் செல்ல முடியாமலும், வசிக்க இடமில்லாமலும் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிடச் சென்ற கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுந்தரமூர்த்தி திபராஜ், கடல் அரிப்பைத் தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

கடல் அரிப்பைத் தடுப்பதற்காக 40 மீற்றர் நீளத்திற்கு பாரிய கற்களைக் கொண்டு பாதுகாப்புச் சுவர் அமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே இப்பகுதிக்கு அருகில் இவ்வாறான கற்சுவர்கள் அமைக்கப்பட்டு வெற்றி கண்டுள்ள நிலையில், தற்போதைய பாதிப்பைக் குறைக்கவும் குடியிருப்புக்களைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.