வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தாழ்வு மண்டலம் ஜனவரி 8 முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு. இலங்கைக்கு தென்கிழக்கே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சியானது தற்போது குறைந்த அழுத்தப் பிரதேசமாக (Low-Pressure Area) வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி முதல் நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய வானிலை நிலவரம்.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, நாட்டின் தற்போதைய வானிலை நிலவரம் வருமாறு..மழை பெய்யக்கூடிய பகுதிகள் கிழக்கு, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வட மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும், நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் சுமார் 100 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.



