இலங்கை வரும் இந்திய இராணுவ தளபதி உபேந்திர திவேதி!

இந்திய இராணுவத் தளபதி உபேந்திர திவேதி, இந்த வாரம் இலங்கைக்கு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்படி, அவர் நாளைய தினம் நாட்டுக்கு வருகைதரவுள்ளதாக இலங்கை இராணுவம் எமது செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியது.

இந்த பயணத்தின் போது, உபேந்திர திவேதி, இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட சில சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், பயிற்சி ஒத்துழைப்பு, திறன் அபிவிருத்தி மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பரஸ்பர விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத் தளபதியின் இலங்கைக்கான பயணம், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், பரஸ்பர நம்பிக்கையை வளர்த்தல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவதை மேம்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.