இறக்காமம் உதவித் தவிசாளராக கே.எல்.சமீம் ஏகமனதாக தெரிவு..!

நூருல் ஹுதா உமர்

இறக்காமம் பிரதேச சபையின் உதவித் தவிசாளராக காற்பந்து சுயேட்சை குழுவின் உறுப்பினர் கே.எல்.சமீம் அவர்கள் இன்று தெரிவு செய்யப்பட்டார். இறக்காமம் பிரதேச சபையின் உதவி தவிசாளர் தெரிவு இன்று காலை 10.00 மணிக்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற போது, சபைக்கு சமூகமளித்த 8 உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவோடு கே.எல்.சமீம் தெரிவு செய்யப்பட்டார்.

முன்னர் உதவித் தவிசாளராக கடமையாற்றிய என்.எம்.ஆசீக் இராஜினாமாச் செய்ததின் மூலம் உதவி தவிசாளர் பதவி வெற்றிடமாகக் காணப்பட்டிருந்தது. அந்த வெற்றிடத்திற்கே இன்று இடம்பெற்ற விசேட சபைக் கூட்டத்தில் உதவி தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நான்கு உறுப்பினர்களும், தேசிய காங்கிரஸ், பொதுஜன ஐக்கிய முன்னணி, அன்னாசி மற்றும் காற்பந்து சுயேட்சைக் குழுவினதும் தலா ஒவ்வொரு உறுப்பினர்கள் என 8 பேர் கலந்து கொண்டிருந்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் மூன்று உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்களும் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை. இந்நிலையில், கே.எல்.சமீம் அவர்களின் பெயர் மாத்திரமே உதவித் தவிசாளர் பதவிக்கு பிரேரிரிக்கப்பட்டதினால் ஏகமனதாக சமீம் அவர்கள் உதவித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி அவர்கள் அறிவித்தார்.

இன்றைய உதவித் தவிசாளர் தெரிவு விசேட அமர்வில் பார்வையாளர்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.எஸ்.உதுமாலெவ்வை, எம்.எஸ்.அப்துல் வாசித் ஆகியோர் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கு சுயேட்சைக் குழு உறுப்பினர் கே.எல்.சமீம் ஆதரவு வழங்கியதற்கமைவாகவே கே.எல்.சமீம் அவர்கள் உதவித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.