புதுக்குடியிருப்பில் மாத்திரம் 1200மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்

த.சுபேசன்

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள 19 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கி 1200 மாற்றுத்திறனாளிகள் காணப்படுவதாக எழுகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் ரூபன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு- உடையார்கட்டு கிராம சேவகர் பிரிவில்,
தாயக உறவுகளுக்கு கைகொடுக்கும் இலக்கியா தென்றல் அமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உலர் உணவுப் பொதி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். ​இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்:

​முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் எதனால் இவ்வாறு ஆனார்கள் என்று இங்குள்ள அனைவருக்கும் தெரியும். ‘தாயக உறவுகளுக்கு கைகொடுக்கும் இலக்கியா தென்றல் அமைப்பின் நிறுவனர் தனுஷ் அவர்களும் இதனை நன்கு அறிந்தவர். எமது மண்ணின் வடுக்களையும், துன்பங்களையும், துயரங்களையும் அறிந்தவர்கள் பலர் புலம்பெயர் தேசங்களிலிருந்து இவ்வாறான உதவிகளை முன்னெடுக்கின்றார்கள்.
அதுபோன்றே தனுஸ் அவர்களும் தனது சகோதரர்கள் நினைவாக இலக்கியா-தென்றல் அமைப்பு ஊடாக தாயக உறவுகளுக்கு உதவி வருகின்றார்.

தாயக மக்களின் நிலை உணர்ந்து உதவுபவரகள் போற்றப்பட வேண்டியவர்கள். முல்லைத்தீவில் பல மாற்றுத்திறனாளிகள் உள்ளபோதிலும், அவர்கள் அனைவருக்கும் ஒருமித்து உதவி வழங்க முடியாத நிலைமையில்தான் நாம் இருக்கின்றோம். ​இருப்பினும், உடையார்கட்டு கிராம அலுவலர் பிரிவில் உள்ள 130 மாற்றுத்திறனாளிகளுக்கும் இலக்கியா தென்றல் அமைப்பு ஒருமித்து உதவித்திட்டம் வழங்கியுள்ளது.

இந்த உதவியினை வழங்கிய இலக்கியா தென்றல் அமைப்பிற்கும், அதன் நிறுவனர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் எழுகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் சார்பாக எனது பாராட்டுக்கள்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.