திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அப்படிக் கூறினாரா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது ஆனால் வெருகலில் நான் நிவாரணம் வழங்கியதால் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்பது மட்டும் எனக்குத் தெரியும் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
வெருகலில் நிவாரணப் பொருட்கள் வழங்கியதால் பிரச்சனை ஏற்பட்டது என்றும், பிரதேச செயலாளருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டதென்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் கூறியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, இது தொடர்பில் வினவிய போதே இன்று (17) திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அவரது பிரத்தியேக இல்லத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கலயிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர்.
இம்மாதம் ஐந்தாம் திகதி நான் வெருகலுக்குச் சென்று பிரதேச செயலாளரை சந்தித்துப் பேசினேன். அப்பொழுது நான் வெருகலுக்கு 15 – 20 இலட்சம் ரூபாய் வரையிலான நிவாரணம் வழங்க விரும்புகின்றேன் என்றும், என்ன வழங்கலாம் என்றும் கேட்டேன்.
அதற்கு அவர் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் வடிந்துள்ள சூழலில் நுளம்புப் பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும், நோய் தொற்றுக்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளதாகவும், இவற்றில் இருந்து பாதுகாக்கும் பொருட்டாக வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் அனைத்துக் கர்ப்பிணித் தாய்மார், பாலுட்டும் தாய்மார், ஐந்து வயதுக்குட்பட்ட சிறார், முதியோர் ஆகியோருக்கு நுளம்பு வலையும் சுகாதாரப் பொருட்களும் வழங்கலாம் என்று கூறினார்.
▪மேலும் அவர் மேற்குறிப்பிட்ட பயனாளிகளின் பட்டியலை தான் கிராம அலுவலர் ஊடாக தயாரிப்பதாகவும், இம்மாதம் 13 ஆம் திகதி அவற்றை வழங்கலாம் என்றும், அதற்குரிய ஆயத்தங்களை செய்யுமாறும் கூறினார்.
அதற்கமைய 675 பயனாளிகள் தொகையை எனக்கு அனுப்பியும் இருந்தார். அதன்படி நான் நுளம்பு வலைகளையும், சுகாதாரப் பொருட்களையும் கொள்வனவு செய்து லொறியில் ஏற்றிக்கொண்டு அவர் கூறியவாறு வெருகல் கலாச்சார மண்டபத்திற்குச் சென்றேன். அங்கு பயனாளிகளும், வெருகலிலுள்ள அனைத்து கிராம அலுவலர்களும் கூடியிருந்தனர்.
▪ சரியாக ஒன்பது மணிக்குப் பிரதேச செயலாளரும், துணைப் பிரதேச செயலாளரும் வந்தனர். அதனைத் தொடர்ந்து வழங்களைத் தொடங்கினோம். பிரதேச செயலாளர் கூறியபடி கிராம அலுவலர் ஒவ்வொருவரும் தத்தம் பிரிவிலுள்ள பயனாளிகளின் பட்டியலை வாசிக்க வாசிக்கப் பயனாளிகள் ஒவ்வொருவராக வந்து பொருட்களைப் பெற்றுச் சென்றனர். அண்ணளவாக பதினொரு மணியளவில் வழங்கல் முடிந்து விட்டது.
▪ வழங்கல் முழுவதும் காணொளி செய்யப்பட்டுள்ளது. அங்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.
▪ வழங்கல் முடிவடைந்ததும் நான் வெருகல் கலாச்சார மண்டபத்திலிருந்து பிரதேச செயலகத்திற்கு நடந்து வந்தேன். வழியில் இருந்த மக்கள் யாரும் எந்தக் கேள்வியும் கேட்கவுமில்லை, எந்தக் குறையும் கூறவுமில்லை. மாறாக அவர்களில் பலர் நன்றி தான் கூறினர்.
▪ இறுதியாக பிரதேச செயலக வாசலில் வைத்து பிரதேச செயலாளருக்கு கை கொடுத்துவிட்டுத் தான் எனது வாகனத்தில் ஏறி திருகோணமலைக்கு வந்தேன்.
▪ இதிலிருந்து எனது வழங்கலுக்கும் பிரதேச செயலகத்தில் நடந்த முரண்பட்டிற்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம் என்றும்
அப்படியாயின் அண்மையில் வெருகல் பிரதேச செயலகத்தில் நடந்த பிரச்சனைக்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? எனவும் ஊடகரால் மேலும் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் இவ்வாறு பதிலளித்தார்
▪ வெருகலில் பிரதேச செயலாளருக்கும், உள்ளூர் அரசியல் வாதிகளுக்கும் இடையே தொடர்ச்சியான ஒரு பனிப்போர் காணப்படுகிறது. அதன் விளைவு தான் இதுவாகும் என்றும் மேலும் கூறினார்.


