ஹஸ்பர் ஏ.எச்_
டித்வா சூறாவளி தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய நிவாரண பணிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் திருமலை மக்கள் சேவை மன்றத்தினால் கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட 50 குடும்பங்களுக்கு உணவு அல்லாத அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சிறிய ரக கூடாரங்கள் அடங்கிய தொகுதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (12) மன்றத்தின் தலைவர் எம்.ரீ. எம் .பாரிஸ் தலைமையில் கிண்ணியா மத்திய கல்லூரியில் இடம் பெற்றது.
ஐக்கிய இராஜ்ய உதவி நிறுவனம் (UK Aid), அவுஸ்திரேலியா உதவி நிறுவனம் (Australian Aid) ஐக்கிய நாடுகள் சபையின் செயல் திட்ட சேவைகளுக்கான அலுவலகம் (UNOPS) மற்றும் விருத்தி சிவில் சமூக வலையமைப்பு ஆகிய நிறுவனங்களின் நிதி அனுசரணையில் திருமலை மக்கள் சேவை மன்றத்தினால் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அமெரிக்க இராணுவ விசேட விமான மூலம் திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட பொருட்கள் தொகுதியை மக்கள் சேவை மன்றம் பொறுப்பேற்று அவற்றை உரிய பயனாளிகளுக்கு அன்றைய தினம் பகிர்ந்துளிக்கப்பட்டது.
டித்வா புயல் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு மீள திரும்புவதற்கான இந்த உதவிகள் ஐக்கிய இராஜ்யம் மற்றும் ஆவுஸ்ரேலியா நாடுகளின் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் இந்த திட்டம் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டதாக இதன் போது தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். கனி, ஐக்கிய நாடுகள் சபையின் செயல்திட்ட சேவைகள் அலுவலகத்தில் (யுனோப்ஸ்) நிறுவனத்தினுடைய திட்ட முகாமையாளர் சுரங்க, அதன் கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பான உத்தியோகத்தர் திருமதி நிரோஷிமா, கிண்ணியா பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ. முஜீப், பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம். நிஜாமீ, மக்கள் சேவை மன்றத்துடைய அலுவலர்கள், அதன் தன்னார்வத் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .
—


