மட்டக்களப்பில் இடம்பெற்ற முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா நிகழ்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில் இன்று (13) திகதி வெகு விமர்சையாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா நிகழ்வானது கல்லடி உப்போடை ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய முன்றலில் இருந்து விபுலானந்த அடிகளாரின் திருவுருவ பண்பாட்டு பவணியுடன் ஆரம்பமாகியது.

அதனைத் தொடர்ந்து சுவாமி விபுலானந்த அடிகளாரின் சமாதியில் கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஸ்வர் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.சச்சுதானந்த குருக்கள் அவர்களினால் மலர்மாலை அணிவித்து மங்களாராத்தி நிகழ்த்தப்பட்டது.

பின்னர் சிவானந்தா தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன் அவர்களது தலைமையில் மாவட்ட இந்து கலாசார பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரதான நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் மற்றும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்ட இந்துகலாசார திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெட்ணம், மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிறப்பு அதிதிகள் பலரும் மலர் மாலை அணிவிக்கப்பட்ட வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் மங்கள விளக்கேற்றப்பட்டு தமிழ் வாழ்த்துடன் ஆரம்பமாகியிருந்தது.

இதன் போது சுவாமி விபுலானந்த அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சிக் கூடம் அதிதிகளினால் நாடா வெட்டி திறந்துவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் வரவேற்பு நடனம் மற்றும் அறநெறி பாடசாலைகளின் மாணவர்களினால் கதாபிரசங்கம் உள்ளிட்ட பல கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன், நூற்றாண்டினை முன்னிட்டு தபால் திணைக்களத்தினால் அச்சிடப்பட்டுள்ள தபால் உறை வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், நாளைய தினம் இடம் பெறவுள்ள ஆய்வரங்கம் தொடர்பான ஆய்வு நூலினை கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவர் பேராசிரியர்
சி.சந்திரசேகரம் அவர்களினால் பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளுக்கு முதற்பிரதிகள் வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், நூற்றாண்டினை முன்னிட்டு திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகபோட்டிகள் மற்றும் தேசிய, மாகாண, மாவட்ட மட்டங்களில் நடாத்தப்பட்ட போட்டிகளிலும் பங்கேற்று வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டு, அதிதிகளின் உரைகளும் இடம் பெற்றது.

இன்று (13) திகதி இடம்பெற்ற முதல் நாள் நிகழ்வுகளின் மாலை நிகழ்வாக முத்தமிழ் விழாவில் இயல், இசை, நாடகம் என்பன அரங்கேற்றப்பட்டதுடன், சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மணி மண்டபத்தில் நாளைய தினம் (14) திகதி ஆய்வரங்கம் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.