சுவிஸ்நாட்டில் வசிக்கும் தமிழ் வர்த்தகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் இணைந்து உருவாக்கப்பட்டு, சுவிஸ் அரசாங்கத்தில் சட்டரீதியாக பதிவு செய்யப்பட்ட சுவி்ஸ் தமிழ் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம்(STEDO, தமிழர் வர்த்தகர் சங்கம்) நிறுவப்பட்டு ஒரு வருடம் நிறைவு செய்யும் இந்நேரத்தில், தாயக மக்கள் எதிர்நோக்கும் கடினமான சூழல்களில் நிவாரண உதவிகளை வழங்கி வைத்துள்ளது.
சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், STEDO நிறுவனம் அவசர நிவாரண முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு பொருட்கள், உலருணவுப் பொதிகள், மருத்துவ உபகரணங்கள், குடிநீர், சுகாதாரப் பொருட்கள், குழந்தைகள் தேவைகள் உள்ளிட்ட அவசியமான வளங்கள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரடி விஜயம் செய்து, குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் சுகாதாரப் பொதிகள் விநியோகம் குழந்தைகளுக்குத்தேவையான பல்வேறு பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. மலையகத்தில் மிகவும்பொருளாதார ரீதியாக பலவீன நிலையில் உள்ள தொழிலாளி குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளும் வழங்கப்பட்டுள்ளது. இவ் உதவிகளை STEDO-வின் ஒருங்கிணைப்பில் தன்னார்வலர்கள் பல்வேறு பிரதேசங்களில் உடனடி உதவி நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
இந்த மனிதாபிமான முயற்சிகள் அனைத்தும், சுவிஸ்நாட்டில் வாழும் தமிழ் வர்த்தகர்கள், தொழில் முனைவோர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரின் தாராள மனப்பான்மையையும், ஒன்றுபட்ட ஆதரவையும் அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டன. தாயக மக்களின் துயரத்தை குறைப்பதில் அனைவரும் காட்டிய அர்ப்பணிப்பு, ஒற்றுமை மற்றும் பொறுப்புணர்விற்காக STEDO சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.
STEDO நிறுவனம் சுவிஸ் தமிழர்களின் பொருளாதார மேம்பாடு, சமூக சேவை மற்றும் மனிதசேவையை மையமாகக் கொண்ட வளர்ச்சிப் பணிகளுக்கு தொடர்ந்து அர்ப்பணித்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



