அனர்தத்தின் பின் மாவட்டத்தை மீள கட்டியெழுப்புதல் தொடர்பான கலந்துரையாடல்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்தத்தின்பின் மாவட்டத்தை மீள கட்டியெழுப்புதல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களது தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (03) இடம் பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலின் போது அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள், மற்றும் அவர்களின் அன்றாட வாழ்கையை மீள்கட்டியெழுப்புவதற்கு தேவையான உதவிகளை பெற்றுக் கொள்வது தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இவ் அனர்தத்தின் போது சமைத்த உணவுகள், உலர் உணவு போதிகள், அனர்த்த காப்பு உதவிகள் இந் நிறுவனங்களினால் வழங்கப்பட்டதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை மீள கட்டியெழுப்புவதற்கு தேவையான உதவிகளை அரச அனுசரணையுடன் இந் நிறுவனங்களும் இணைத்து மேற்கொள்வதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அனர்த்தத்தில் சிக்குண்டு பாதிக்கப்பட்டவர்களை இனங்கண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெற்றுக் கொடுப்பதற்கு உடன் செயற்படுமாறு இதன் போது அரசாங்க அதிபர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இக்கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான வி.நவநிதன், ரீ நிர்மலராஜ், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம் சியாத், மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் எம்.சுரேஸ்குமார், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிகள் என பலரும் கலந்து கொண்டனர்.