(ஏறாவூர் நிருபர் )
“கல்விக்காகக் கரம் கொடுப்போம்” என்ற திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினால் கற்றல் உபகரணங்கள் , பாதணிகள் மற்றும் பாடசாலைச் சீருடைகளைச் சேகரிக்கும் பணிகள் இன்று 02.12.2025 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஏறாவூர் ஐயங்கேணியிலுள்ள விசேட தேவையுடைய சிறுவர்களைக் உள்ளடக்கிய ஹிஸ்புழ்ழாஹ் வித்தியாலய சமூகத்தின் சார்பில் முதலாவதாக பெறுமதிமிக்க கற்றல் உபகரணப்பொதிகளை அப்பாடசாலையின் அதிபர் எம்ஜிஏ நாஸர் கையளித்து திட்டத்தினை ஆரம்பம் செய்தார். அப்பாடசாலையின் ஆசிரியர் குழாம் இதற்கான நிதிப்பங்களிப்பினை வழங்கியுள்ளது.
அண்மைக்கால பேரிடரினால் பாதிக்கப்பட்டு கல்விசார் உபகரணங்களை இழந்துள்ள மாணவர்களுக்கு தேவையான பொருட்களைப் பகிர்ந்தளிப்பதற்கென பாடசாலை ஆசிரியர்கள் ஊடாக பெற்றார்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டுமாறு கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் எஸ்ஆர் . ஹஸந்தி அவர்கள் அறிவுறுத்தியதற்கமைவாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
வலயக்கல்விப்பணிப்பாளர் எம்எம். ஜவாதின் ஆலோசனைக்கமைவாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்எச்எம். றமீஸ் தலைமையில் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு;ள்ளன.
கல்வி வலயத்தின் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் ஏ. றியாஸ் , உதவிக்கல்விப்பணிப்பாளர் ஏ. பாறூக் , சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களான எம்எல்எம். சபூர் , எம்ஐ. சித்தீக் மற்றும் இணைப்பாளர் பிஏ. றஹீம் ஆகியோர் இந்நிகழ்வில் பிரசன்னமாயிருந்தனர்.
இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட பிரதேச மாணவர்கள் தமது கற்றல் உபகரணங்கள் மற்றும் பாடசாலைச் சீருடைகளையும் இழந்துள்ளதனால் மீண்டும் பாடசாலைக்குச் செல்லமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பாவிக்கக்கூடிய நிலையிலுள்ள வெள்ளை ஆடைகள் புத்தகப் பைகள் இ சப்பாத்துக்களும் பொதுமக்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.


