திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் விசேட கூட்டம்

ஹஸ்பர் ஏ.எச்_

​மகாவலி கங்கை பெருக்கெடுப்பு மற்றும் மாவிலாறு உடைப்பு காரணமாக, திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அதிக நீர்வரத்தினால் உருவாகியுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாக, திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ விசேட கூட்டம் (01) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

​இந்தக் கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.ஏ.சி.என். தலங்கம, மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார ஆகியோர் கலந்துகொண்டனர்.

​சம்பந்தப்பட்ட அரச துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்தக் கலந்துரையாடலில், தற்போதைய நீர் மட்டத்தின் நிலைமை, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான அவசர உதவி வழங்கல், முன் எச்சரிக்கை மற்றும் இடமாற்றத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

​மேலும், எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய அபாயங்களைக் கருத்தில் கொண்டு,
​ஆபத்தான பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்,
​தேவையான இடமாற்றத் திட்டங்களை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

​மாவட்ட நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன் போது அதிகாரிகள் தெரிவித்தனர்.