சம்பூரில் 500 க்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு..!

( அ . அச்சுதன் )

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு மூதூர் கிழக்கு – சம்பூர் கலாச்சார மண்டபத்தில் சனிக்கிழமை (22) இடம்பெற்றது.
மூதூர் கிழக்கு – சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட மாவீரர் பெற்றோர் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர் பெற்றோர்கள் சம்பூர் பிள்ளையார் ஆலய முன்றலில் மாலை அணிவிக்கப்பட்டு மேளதாளங்களோடு மலர்தூவி விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது யுத்தத்தில் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி பிரதான சுடரேற்றப்பட்டு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.இதன்போது மாவீரர் பெற்றோர்களுக்கு தென்னை மரக்கன்றுகள், அன்பளிப்பு பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் சிறப்பாகும்.

இவ் பெற்றோர் கௌரவிப்பில் மாவீரர்களின் பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள், தமிழ் அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.