எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மதங்களுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் கண்டி – மாவனல்லைக்கு நட்புறவு விஜயமொன்றினை தேசிய சமாதான பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச சர்வமத குழுவினர் மேற்கொண்டுள்ளனர், குறித்த சந்தர்ப்பத்திலேயே மாவனல்லை பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் ஹேரத் மாவனல்லை போன்றதொரு அழகிய நகரம்தான் மட்டக்களப்பு, அங்குதான் மீன் பாடும் கல்லடிப்பாலமும் இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட தேசிய சமாதான குழுவின் பிரதான ஒருங்கிணைப்பாளரும் வண்ணாத்திப் பூச்சி சமாதான பூங்காவின் ஒருங்கிணைப்பாளருமான துரைசாமி நகுலோஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர் உ.உதயகாந்த் (ஜே.பி) ஒருங்கிணைப்பில் விஜயம் மேற்கொண்ட குழுவினரை மாவனல்லை பிரதேச செயலாளர் திருமதி.விஜானி ரத்ணசேகர தலைமையிலான குழுனர் வரவேற்பளித்திருந்தனர்.
“நற்புறவைப் போணி –
மனித நேயத்தை வளர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஸ்ரீ பாதிராஜா விகாரையின் விகாராதிபதி உடவத்தே விஜித்த தேரர் உள்ளிட்ட சர்வமத தலைவர்கள், மாவனல்லை பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் ஹேரத், மாகாண சமூக சேவை திணைக்கத்தின் உயரதிகாரிகள், பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பொலிஸ் உயரதிகாரிகள் உள்ளிட்ட திணைக்களம் சார் அதிகாரிகளும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் மாவனல்லையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளின் நடனம், பாடல்கள் மற்றும் மட்டக்களப்பில் இருந்து வருகை தந்த சிறார்களின் அழகிய கண்கவர் நடனங்கள் அரங்கேற்றப்பட்டதுடன், அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பில் இருந்து விஜயம் செய்த குழுவினர் மாவனல்ல நகரத்தின் வரலாற்றை பறைசாற்றி நிற்கும் மாதிரிக் கிராமத்தை பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், பகல் விருந்துபசார ஏற்பாட்டினையும் மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது மாவனல்லை பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் ஹேரத் அவர்கள் பிரதம அதிதி உரையாற்றுகையில் மாவனல்லை போன்று அழகிய ஒரு நகரம்தான் மட்டக்களப்பு, அங்கு தான் மீன் பாடும் கல்லடிப்பாலமும் இருக்கின்றது, அதுமட்டுமல்லாது அனைத்து இன, மத மக்களும் இங்கு மிகுந்த ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதையும் ஒரு போதும் மறந்துவிட முடியாது என்றார்.


