சமுதாய அடிப்படை அமைப்பினால் சமுர்த்தி சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சமுர்த்தி பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வு நேற்று (2025.11.11) பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், உதவிப் பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரணிதரனின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வு சிறுவர்களின் தலைமைத்துவ பண்புகள், சமூக பங்களிப்புத் திறன்கள், பொறுப்புணர்வை மேம்படுத்தல் மற்றும் சிறுவர் உரிமைகளை பாதுகாத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது.

இப்பயிற்சி செயலமர்வின் வளவாளர்களாக பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களான எம்.புவிதரன் மற்றும் எஸ்.சத்திநாயகம், பிரதேச சிறுவர் நன்னடத்தை பாதுகாப்பு உத்தியோகத்தர் த. அஜந்தா, அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.கலாமேகன் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் விளையாட்டுகளூடாக சிறப்பான முறையில் செயலமர்வை நடாத்தினர்.

இந் நிகழ்வில் தலைமையக முகாமையாளர் புவனேஸ்வரி ஜீவகுமார், முகாமைத்துவப் பணிப்பாளர் கே. உதயகுமார், சமூக அபிவிருத்தி உதவியாளர் தெ.உதயசுதன், சமுதாய அடிப்படை அமைப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.ஜசோபனா, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள், சிறுவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.