எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு சர்வதேச விமான நிலைய காணி விஸ்தரிப்பின் போது வலையறவு, திமிலைதீவு, புதூர், சேத்துக்குடா ஆகிய பகுதிகளில் காணிகள் சுவீகரிக்கப்பட்டவர்களுக்கான மாற்றுக் காணிகளுக்காண உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று (28) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் உள்ளிட்ட மாவட்ட செயலக காணி பிரிவின் அதிகாரிகளும் கலந்து கொண்டு குறித்த விடையம் தொடர்பாக எடுக்கப்பட்டுவரும் முன்னெடுப்புக்கள் தொடர்பாக தமது கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.
மாற்றீடாக வழங்கப்பட்ட குறித்த காணிகளுக்கான ஆவணங்கள் கடந்த 40 வருடங்களாக வழங்கப்படாதிருந்த நிலையில் தமது அரசாங்கத்தின் ஊடாக மிக விரைவாக இதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க முயற்சிகளை எடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கருத்து தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் தமது விடையம் தொடர்பில் இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் முன்னெடுப்புக்கள் தொடர்பாக நம்பிக்கை கொள்வதுடன் தமக்கான தீர்வு 4 வருடங்களுக்குள் பெற்றுக்கொடுக்கப்படலாமென எதிர்பார்ப்பதாகவும் கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


