பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பற்றிய கவலை நீங்கி நிம்மதி அடையும் நிலை உருவாகியுள்ளது!

நூருல் ஹுதா உமர்

இப்போதிருக்கும் அரசாங்கத்தின் முகாமில்லாத ஒருவராக நான் இருந்தாலும் பொதுமகனாக நோக்கும் போது இந்த நாட்டின் ஜனாதிபதி எமது நாட்டிலிருந்து போதையை ஒழிக்க முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் பாராட்டும் விதமாக இருக்கிறது. பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாவனைக்கு அறிமுகமாகி வந்த போதைப்பொருள் பாவனையை ஒழித்து மாணவர்கள் சிறந்த கல்வியை கற்க யுத்த களத்தில் நின்று போராடுவது போன்று அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என உள்ளூராட்சி மாகாண சபைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசிய அவர்,

ஜனாதிபதியின் இந்த போதையொழிப்பு நடவடிக்கையினால் எமது மாவட்டமும், எமது பிரதேசங்களும் நன்மை அடைந்துள்ளது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பற்றி பெரிய அளவில் கவலையில் இருந்தார்கள். இன்று அவர்களின் கவலை நீங்கி நிம்மதி அடையும் நிலை உருவாகியுள்ளது. பிள்ளைகள் 100 சதவீதம் கல்வியில் கவனம் செலுத்தும் போது பிழையான பாதையில் பயணிக்க மாட்டார்கள். இன்றைய நவீன உலகில் செயற்கை நுண்ணறிவில் உலகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதனால் வீட்டிலிருந்தவாறே சம்பாதிக்கும் காலம் இப்போது உருவாகியுள்ளது.

கல்வி மற்றும் தொழில் புரட்சியினால் எதிர்காலத்தில் அதிக நன்மை அடையும் வகையில் கல்வித்திட்டங்கள் மாறப்போகிறது. நாங்கள் மாற்று அரசியல் பயணத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களை பாராட்டி தான் ஆக வேண்டும். அரசியல் ரீதியாக ஜனாதிபதி முஸ்லிம் இளைஞர்களை போதையூட்டுவதாக அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி ஒருவர் அண்மையில் பேசியிருந்தார். அரசியல் ஆதாயங்களுக்காக முட்டாள்தனமான கருத்துக்களை பொது வெளியில் விதைக்க கூடாது. இவ்வாறான கருத்துக்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

நல்ல விஷயங்கள் நல்லது என்றே கூறவேண்டும். அதே நேரம் சமூகம் சார் அநீதிகள் இடம்பெறும் போது அது ஜனாதிபதி என்றாலும் சரி எந்த தலைவராக இருந்தாலும் அநீதிக்கு எதிராக நாம் போராட வேண்டும் என்றார்.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR