நூருல் ஹுதா உமர்
இன்றைய உலகம் மின்னல் வேகத்தில் மாறிக்கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி, உலக அறிவு, போட்டித் தன்மை இவை அனைத்தும் நிச்சயமாக அவசியம் என்பதில் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் உலக அறிவோடு மார்க்க அறிவு இணையும் போது தான் வளர்ச்சி என்பது முழுமையடையும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் தெரிவித்தார்.
கல்முனை கல்வி வலய நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நடைபெற்ற கல்வி கண்காட்சியின் இரண்டாம் நாள் நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,
இன்றைய சமூகத்தில் நாம் காணும் பல குழப்பங்கள், தவறான சிந்தனைகள், இளைஞர்களின் வழிதவறல்கள் இவை அனைத்திற்கும் அடிப்படை காரணம் மார்க்கக் கல்வியின் பற்றாக்குறை தான். “மார்க்கம் என்பது வழிபாட்டில் மட்டும் அல்ல, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் ஒளி புகட்டும் வழிகாட்டி.” இத்தகைய மார்க்க உணர்வும் சமூகப் பொறுப்பும் கொண்ட தலைவர்கள் அரசியலில் உருவாகுவது, நம் சமூகத்திற்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
இன்றைய பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகத் தலைவர்கள் அனைவரும் மார்க்கக் கல்வியின் அவசியத்தை உணர்ந்து, மார்க்க அறிவும் உலக அறிவும் இணைந்த சமநிலை தலைமுறையை உருவாக்க வேண்டும் என்றார்
UMAR LEBBE NOORUL HUTHA UMAR


