கிழக்கு மாகாணத்தில் பொது மக்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் கிளீன் சிறிலங்கா தேசிய திட்டம்

(ஏறாவூர் நிருபர்-நாஸர்)

கிளீன் சிறிலங்கா தேசிய திட்டம் கிழக்கு மாகாணத்தில் பொது மக்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு – ஏறாவூர் நகர பிரதேசத்தில் சாரணர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் (இன்று 19.10.2025 காலை) சிரமதானப்பணிகள் நடைபெற்றன.

சங்கத்தின் தலைவர் எம்எஸ்எம். றூமி தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் செங்கலடி மத்திய கல்லூரி, விவேகானந்தா வித்தியாலயம், காத்தான்குடி மத்திய கல்லூரி மற்றும் ஏறாவூர் மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலை ஆகிய கல்விக்கூடங்களின் சாரண மாணவர்கள் இச்சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிமனையின் சாரண உதவி ஆணையாளர் ஜோன் பிரான்ஸிஸ்இ சாரணர் சங்கத்தின் ஆலோசகர் ஏ. அலிமுகமட் மற்றும் நகர சபையின் வட்டார உறுப்பினர் நாஸர் அஸ்வத் ஆகியோர் பணியில் பங்கேற்றனர்.

நகர சபையின் மௌலானா பூங்கா , ஜைனுலாப்தீன் ஆலிம் பூங்கா உள்ளிட்ட பிரதேசங்கள் சிரமதானப் பணிமூலமாக சுத்தம் செய்யப்பட்டது.

நகர சபையின் சுத்திகரிப்பு ஊழியர்கள் மற்றும் உழவு இயந்திரங்களும் இதன்போது பயன்படுத்தப்பட்டன.