சுனாமி ஒத்திகைக்கான “மேசை வழிப் பயிற்சி”

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள சுனாமி ஒத்திகையை திறம்பட செய்வதற்காக மேசை வழிப் பயிற்சி மூலம் எவ்வாறு தகவல்கள் பரிமாற்றம் செய்யலாம் என்பது தொடர்பான செயலமர்வு நேற்று (15) பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் (பயிற்சி) பிரதிப் கொடுப்புலி மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.சியாட், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் மற்றும் நகரசபை செயலாளர், நகர சபை உறுப்பினர், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சம்மேளன பிரதிநிதிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இராணுவ பொலிஸ் அதிகாரிகள், இலங்கை செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள், வைத்திய அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இச் செயலமர்வு சுனாமி அனர்த்தம் ஏற்பட வாய்ப்புள்ளது என முதலாவது அறிவித்தல் விடுக்கப்பட்டதன் பின்னர் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் தங்களது முக்கிய ஆவணங்களான தேசிய அடையாள அட்டை , பிறப்பு பதிவுகள் போன்றவைகளை எடுத்துக் கொண்டு பாதுகாப்பான வழி ஊடாக ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பாதுகாப்பான புகலிடத்திற்கு எவ்வாறு வந்து சேர்வது, அவர்களுக்கான உதவிகளை எவ்விதத்தில் மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பாகவும், சுனாமி ஏற்பட்டால் இதற்காக 19 படிமுறைகளில் தகவல்களை மக்களுக்கு சேர்க்கக் கூடிய வகையில் செயற்பாட்டு பயிற்சியும் இதன்போது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளரினால் மேசை வழிப் பயிற்சி மூலம் செயற்படுத்தி விளக்கமளிக்கப்பட்டது.