பத்திரிகைத் துறையிலும் வானொலித் துறையிலும் ஐந்து தசாப்தத்துக்கு மேலாக பணிபுரிந்தவரே அல்ஹாஜ் அபுல் ஹசன்.
அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட அல்ஹாஜ் அபுல் ஹசன், 86 வருடங்கள் வாழ்ந்து கடந்த ஆகஸ்ட் 11ஆம் திகதி கொழும்பில் அவரது இல்லத்தில் இறையடி எய்தினார்.
வாழ்வில் பெரும்பகுதியை கொழும்பிலே கழித்த அவர் ஹசன் ஹாஜி என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டார்.
இவர் தனது ஊடகத்துறை வாழ்க்கையை சுயாதீன பத்திரிகை சமாஜம் நடாத்திய சன் என்ற ஆங்கில பத்திரிகையிலும் தினபதி என்ற தமிழ் பத்திரிகையிலும் ஆரம்பித்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்திப் பிரிவின் சிரேஷ்ட செய்தியாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றார்.
இவருக்கு இருந்த தமிழ் மற்றும் ஆங்கில அறிவு காரணமாக இவர் பணிபுரிந்த பத்திரிகையிலும் மற்றும் இலங்கை வானொலியிலும் இவர் அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட ஒருவராக இருந்தார். கொழும்பில் நடைபெற்ற அணி சேரா நாடுகளினுடைய உச்சி மாநாடு மற்றும் ஆறாவது சார்க் மாநாடு உட்பட பல சர்வதேச மாநாடுகளில் கலந்துகொண்ட உலகத் தலைவர்கள் தொடர்பான செய்திகளை இலங்கை வானொலிக்கு திரட்டி வழங்கிய முக்கிய செய்தியாளராக ஹாஜி ஹசன் திகழ்ந்தார்.
ரூபவாஹினி இலங்கைக்கு அறிமுகப்படுத்த முன் நாட்டு மக்கள் செய்திக்காக இலங்கை வானொலியிலே தங்கி இருந்தார்கள். இதனால், ஹாஜி ஹசனின் சேவை வானொலிக்கு இன்றியமையாததாக இருந்தது. 1971 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணைந்த அவர், ஓய்வுபெறும் வரை அங்கே பணிபுரிந்தார். சில வருடங்கள் அவர் அபூதாபியில் இலங்கை தூதுவராலயத்தில் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மர்ஹும் ஏ.சீ.எஸ். ஹமீதின் சிபாரிசில் நியமிக்கப்பட்டார்.
1985 முதல் 88 வரை தூதுவராலயத்தின் தகவல் அதிகாரியாகப் பணிபுரிந்தார். இவர் அதே காலத்தில் அபுதாபியில் இயங்கிய லங்கா இஸ்லாமிய அசோசியேஷன் என்ற இயக்கத்தினால் வெளியிடப்பட்ட செய்திப் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணி புரிந்தார். அதற்கு மேலதிகமாக இவர், ஈரானின் செய்திச் சேவையான இரனாவின் கொழும்புச் செய்தியாளராகவும் பணிபுரிந்தார்.
உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் சங்கத்தில் பணிபுரிந்த இவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக அங்கத்தவர்களில் ஒருவருமாவார்.
மீடியா போரத்தின் உபதலைவர், ஆலோசகர் பதவிகளையும் இவர் வகித்து அதன் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார்.
ஈரான், ஈராக் யுத்தத்தின் போது யுத்த முனைக்கு செய்தி சேகரிப்பதற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இவரை அனுப்பி வைத்திருந்தது. அக்காலத்தில் யுத்த முனையில் இருந்து இவர் சுடச்சுட செய்திகளை அனுப்பி வைத்திருந்தார்.
மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரியில் கல்வி பயின்ற இவர், 1939 ஆம் ஆண்டில் அக்கரைப்பற்றில் முகம்மத் அபூபக்கர் திருமதி ஹலீமாநாச்சியாவின் மகனாகப் பிறந்தார்.
அக்கரைப்பற்று சித்தி றஸீனாவைத் திருமணம் செய்த இவர், மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
இவரது ஒரே மகன் டாக்டர் முர்சித் அபுல் ஹசன் லண்டனில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். லண்டன் வைத்தியசாலை ஒன்றில் சிரேஷ்ட வைத்தியராக இவர் பணிபுந்து வருகிறார்.
மர்ஹும் அபுல் ஹசன் அவர்கள் முன்னாள் முஸ்லிம் சமய ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் அறிமுகப்படுத்திய வாழ்வோரை வாழ்த்துவோம் திட்டத்தின் கீழ் சத்திய எழுத்தாளர் சௌத்துல் ஹக் என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
இவர் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாட்டின் போது அவரது ஊடகப் பணிக்காக கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மர்ஹும் அபுல் ஹசன் அவர்கள் அக்காலத்தில் செய்தியாளர் மாநாடு போன்ற நிகழ்வுகளுக்குச் சென்றால் இளம் பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டியாகவும் செயற்பட்டார். பத்திரிகையாளர் மாநாடு பற்றிய விவரங்களை இளம் பத்திரிகையாளருக்கு விளக்குவது அவரது விளக்கமாக இருந்தது. இதனால் இவர் இளம் பத்திரிகையாளர் மத்தியிலே பிரபலமான ஒருவராக இருந்தார்.
ஐவேளைத் தொழுகையை கண்டிப்பாக கடைப்பிடித்து வந்த மர்ஹும் அபுல் ஹசன், பழகுவதற்கு இனியவராக இருந்தார். இவரது வழிகாட்டலில் பல இளம் ஊடகவியலாளர்கள் உருவாக முடிந்தது. கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் மூத்த ஊடகவியலாளரான எம். ஏ. பகுர்தீனின் சகோதரரான இவர், சமயநெறிகளை பின்பற்றி வாழ்ந்த ஒரு முன்மாதிரி மிக்க ஊடகவியலாளராவார்.
ஆரம்ப காலத்தில் அக்கரைப்பற்றில் பள்ளிவாசலில் நம்பிக்கையாளராகவும் பணிபுரிந்து, ஊர் முன்னேற்றத்துக்காக உழைத்த ஒருவராக அபுல்ஹாசன் ஹாஜியை அறிமுகப்படுத்தலாம்.
அன்னாருடைய பாவங்களை மன்னித்து, அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனம் கிடைக்கப் பிரார்த்திப்போமாக!
என்.எம்.அமீன்


