புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் பகுதி திறந்து வைப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் புனரமைக்கப்பட்ட பகுதி நேற்று (11) மாலை 5.00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.

க்ளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் நடைபெறும் புகையிரத நிலைய புனரமைப்பு திட்டத்திற்கமைவாக, மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் நீண்டகாலமாக கவனிப்பின்றி இருந்த கட்டத் தொகுதிகள் சுத்தம் செய்யப்படுவதோடு புதிதாக வர்ணம் தீட்டப்பட்டன.

இந்த பணியில் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் சாரணர் அணியினர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இத்திட்டம் சாரணர் இயக்கத்தின் அதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

புனரமைக்கப்பட்ட புகையிரத நிலையப்பகுதியை மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

அத்துடன், “பசுமையான புகையிரத நிலையம்” எனும் கருப்பொருளில் மரக்கன்றுகள் அதிதிகளால் நிலைய அதிபரிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சாரணர் இயக்கத்தின் அதிகாரிகள், சிசிலியா பெண்கள் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள், மட்டக்களப்பு புகையிரத நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த திட்டத்தினை ஜனாதிபதி சாரணர் விருதினை பெற இருக்கின்ற சாரண மாணவிகள் தமக்கான திட்டங்களில் ஒன்றாக இதனை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.