(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வரும் பிரதீபா – 2025 மாகாண மட்டப் போட்டியில், சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு முன்னேறி சாதனை நிலைநாட்டியுள்ளனர்.
இம்முறை மருதமுனை ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்த போட்டிகளில் சுமார் 15 க்கு மேற்பட்ட மத்திய நிலையங்கள் பங்குபற்றியிருந்தன. அதில் முஸ்லிம் பிரிவில் சுமார் 07 மத்திய நிலையங்கள் கலந்து கொண்டன.
இந்த கிழக்கு மாகாண மட்டப் போட்டிகளில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் கலந்து கொண்ட கோலாட்டம் கனிஷ்ட நிகழ்ச்சியில் 90 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு சாய்ந்தமருதுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இது சாய்ந்தமருது வரலாற்றில் எழுதப்பட வேண்டிய பாரியதொரு வெற்றியாகும். ஏனெனில், சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையம் திறந்து குறுகிய காலப்பகுதியில் மிக நீண்ட காலமாக செயற்பட்டு வந்த மத்திய நிலையங்களை வீழ்த்தி இவ்வெற்றிச் சாதனையை நிலை நாட்டியுள்ளனர்.
இந்த வெற்றியில் பங்கு கொண்ட கோலாட்டப் பிரிவின் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களான எம்.எம்.எம். சல்பி, என்.எம். நப்லான், எம்.எம்.றினாஸ், என்.எம்.அப்றி, எம்.ஏ. ஆபித், ஆர். கம்ரான் அஹ்மத், எம்.என்.எம். மாயிஸ், ஏ.எம்.அஹ்திர் ஆகியோரும் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் மாணவர்களான ஆர்.எம். றிவி, எஸ்.எம். ஸராப், எஸ்.எல்.எம். ஹாதீம் மற்றும் இவ்வெற்றிக்கு பின்புலமாய் இருந்து செயற்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் மற்றும் கலாசார மத்திய நிலையத்தில் இம் மாணவர்களைப் பயிற்றுவித்த வளவாளர்களான, சிரேஷ்ட அண்ணாவியார் ஏ. இஸ்ஸதீன், எம்.ஐ.எம். அமீர் (ஆசிரியர்), பொல்லடி பயிற்றுவிப்பாளர் ஊடகவியலாளர் கலைச்சுடர் எம்.எஸ்.எம்.ஸாகிர்
உட்பட வெற்றிக்காகப்பங்கு பற்றி பாடுபட்ட அனைவருக்கும் கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ. பி. நௌசாத், வாழ்த்துக்களோடு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இதேவேளை, இக்காலாசார மத்திய நிலையத்தின் மூலம் கலந்து கொண்ட ஏனைய போட்டிகளான கிராமிய பாடல் தனி நிகழ்ச்சியில் முதலாமிடத்தையும் மற்றும் கிராமிய பாடல் குழுப் போட்டியில் இரண்டாமிடத்தையும் சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலய மாணவர்கள் பெற்றுக் கொண்டதோடு, ரபான் போட்டியில் இரண்டாமிடத்தை கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் மாணவர்கள் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


