அவுஸ்திரேலியாவில் வசிக்கும் வின்சென்ட் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும் , பழைய மாணவர்சங்க அவுஸ்திரேலியா கிளையின் உறுப்பினருமான கிருஷ்ணானந்தி மகேஸ்வரன் மற்றும் குமாரகுல சிங்கி குடும்பத்தினரும் இணைந்து சுமார் 3- மில்லியன் செலவில் பாடசாலை வின்சென்ட் நூலகத்தை இணைய வழி நூலகமாக்கி டிஜிட்டல் மயப்படுத்தி , நூலகம் கணனி மயமாக்கப்பட்டு முழுமையாக குளிரூட்டப்பட்டு நவீனமயமான நூலகமாக வடிவமைக்க அனுசரணை வழங்கி இருந்தனர் .
கிருஷ்ணானந்தி அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் ,அறிவு விருத்திக்காகவும் வினைத்திறனுள்ள மாணவர்களை உருவாக்குவதற்குமான உயரிய சிந்தனையின் அடிப்படையில் டிஜிட்டல் நூலகம் திறந்து வைக்கப்பட்டது .
பாடசாலை முதல்வர் தவதிருமகள் உதயகுமார் தலைமையில் இடம் பெற்ற நூலக திறப்பு விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி கலந்து சிறப்பித்தார் .
கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட நூலகர் ரவிக்குமார் முத்துராஜா இந்த டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட இணையவழி சேவையை செயல்படுத்த ஆலோசனை வழங்கி பூரண ஒத்துழைப்பு வழங்கி இருந்தார் .
நிகழ்வில் ஓய்வு நிலை அதிபர்கள் ,பாடசாலை பிரதி அதிபர்கள் ,ஆசிரியர்கள் மாணவர்கள், பாடசாலை பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள் .



