வவுணதீவில் இடம்பெற்ற பெரும் போக பயிர்ச் செய்கைக்கான ஆரம்பக் குழுக் கூட்டம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

வவுணதீவு – மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட
2025 ஆண்டிற்கான பெரும் போக பயிர்ச் செய்கையின் ஆரம்பக் கூட்டம் இன்று இடம்பெற்றது.

வவுணதீவு – மண்முனை மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆரம்ப கூட்டத்தினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் பிரதிநிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷனி ஸ்ரீகாந்த் அவர்கள் கலந்து கொண்டு குறித்த கூட்டத்தினை தலைமை தாங்கி நடாத்தியிருந்தார்.

உன்னிச்சை, அடைச்சகல் மற்றும் சிறிய நீர்ப்பாசன திட்டங்கள் ஊடாக இம்முறை வவுணதீவில் 35,806 ஏக்கர்கள் விதைப்பு செய்யப்படவுள்ள நிலையில், விதைப்பு ஆரம்ப திகதி, அறுவடை ஆரம்ப திகதி, கால் நடைகளை மேச்சற் தரைப்பகுதிகளுக்கு கொண்டு செல்வது மற்றும் மீண்டும் கால்நடைகளை கொண்டு வருவதற்கான திகதி, வெட்டு இயந்திரங்களுக்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ள கொடுப்பனவு,
வயற் காவலாளிகளுக்கான கொடுப்பனவு, கால் நடைகளால் ஏற்படுத்தப்படும் சேதங்களுக்கு ஏற்ப கால்நடை உரிமையாளரிடம் இருந்து நஸ்ட ஈட்டை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு விவசாயிகளுக்கு சாதகமான முடிவுகள் எட்டப்பட்டது.

மேலும் இதன் போது விவசாயிகளுக்காக அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊடாக வழங்கப்படும் வங்கி கடன்கள், மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திட்டங்கள், தொழில் நுட்ப உதவிகள், விதை நெல் விநியோகம், விவசாய கமநல காப்புறுதி, வாய்க்கால்கள் திருத்தியமைத்தல், குளங்கள் புனரமைத்தல், விவசாயிகளுக்கான மானியம் வழங்கல் உள்ளிட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு அவற்றில் அதிகமான பிரச்சனைகளுக்கான தீர்வுகள் வழங்கப்பட்டதுடன் சில பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கான ஆலோசனைகள் மேலதிக அரசாங்க அதிபரினால் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஆரம்ப கூட்டத்தில் வவுணதீவு பிரதேச சபையின் தவிசாளர், மட்டக்களப்பு மாவட்ட செயலக மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர்கள், விவசாய விரிவாக்கல் திணைக்கள பணிப்பாளர், தேசிய உரச் செயலக மாவட்ட பிரதிப்பணிப்பாளர், கமநல சேவை திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், துறைசார் திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், பண்ணையாளர்கள் என கலந்துகொண்டு தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இம்முறை ஆரம்ப விதைப்பு திகதியாக எதிர்வரும் 10.10.2025 திகதியை தீர்மாணித்துள்ளதுடன், 3 மாத நெற் பயிர்ச் செய்கையினை மேற்கொள்ளவுள்ளவர்கள் குறித்த திகதியில் இருந்து 10 நாட்கள் தாமதமாகி விதைக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டனர்.