சுவிஸ் சூரிச்சில் மௌனித்தபொழுது ஒரு ஊடகவியலாளரின் பார்வையில்…

ஊடகவியலாளரின் பார்வையில்…..
தாயகத்திற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகளை மையமாகக் கொண்ட உண்மைச் சம்பவம் ஒன்றை கருப்பொருளாக வைத்து தாயகம் காரைநகரைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் சுதாகரன் அவர்கள் இயக்கிய “மௌனித்தபொழுது” முழுநீளத் திரைப்படம் கடந்த ஞாயிறு சுவிஸ் சூரிச்சில் காண்பிக்கப்பட்டது. குமாருடன் போய் அந்தப் படத்தை பார்த்து ரசிக்க சந்தர்ப்பம் கிட்டியது.
தமிழகத்திலிருந்து வெளிவரும் தமிழ் படங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தாயகக் கலைஞர்களை வைத்து மிகமிகச் சிறப்பாக இயக்கியுள்ளார் சுதாகர்.அவரது இந்த முயற்சிக்கு முதற்கண் எனது பாராட்டுக்கள்.
தாயகத்தில் காரைநகரின் கலை,கலாச்சார விழுமியங்களை அச்சொட்டாக எடுத்துக்காட்டும் வகையில் சிறப்பாக படத்தில் சித்தரித்துள்ளார். காரைநகரை நேரில் பார்க்கும் உணர்வு படத்தில் எதிரொலித்திருந்தது.
தாயகத்தில் இந்தளவு ஆற்றல் உள்ள நடிகர்கள் இருக்கிறார்களா என பிரமிக்கும் வகையில் அவர்களது நடிப்பு சிறப்பாக அமைந்திருந்தது.
இனிமையான குரலில் கருத்தாளம் கொண்ட பாடல்கள் காதுக்கு தெவிட்டாக இருந்தது.
படத்தின் இசையமைப்பு, காட்சியமைப்பு என்பன சொல்லி மாளா.
சிறப்பாக தமிழனின் பழக்கவழக்கங்கள், சொல்லாடல் என்பன சிறப்பாக அமைந்திருந்தன.
மொத்தத்தில் தாயக தமிழர்களின் உணர்வுகள் திரைப்படம் மூலம் வெளிப்படுத்தமுடியுமா என்ற கேள்விக்கு இயக்குனர் சுதாகரன் நல்ல பதிலை வழங்கியுள்ளார் என்று நிச்சயம் கூறலாம்.
இத்தகைய முயற்சிகள் தொடரவேண்டும். அதுவே எமது இனத்தின் விடியலுக்கு உதவும்.
முக்கிய விடயம் ஒன்றை கூறாமல் விடமுடியாது. இந்தப்படத்தை பார்க்க வந்தவர்கள் சிலருடன் கதைத்தபோது, இந்தியப்படத்தை பார்க்க கூட்டம் நிரம்பி வழியுது. எமது கலைஞர்களின் படைப்பிற்கு 100 பேர்தான் வருகிறார்கள் என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
இந்தநிலை தொடரக்கூடாது எமது கலைப் பாரம்பரியங்களை பேணிப் பாதுகாக்க எமது கலைஞர்களின் படங்களுக்கும் மக்கள்கூட்டம் நிரம்பி வழியவேண்டும். அதுவே எங்கள் ஆசை.
– மாவை குகன்