எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
உலக சுகாதார ஸ்தாபனமானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் ஒருவாரத்தினை தேர்ந்தெடுத்து விஷ ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்துவது வழமை. அந்த வகையில் இவ்வருடத்திற்கான கருப்பொருளாக அழகு சாதன பொருட்களாக பயன்படுத்தப்படும் கிறீம் வகையினை விஷப் பொருளாக பிரகடனப்படுத்தியுள்ளது.
விஷம் எனும் பிரிவிற்குள் அலகுசாதனப் பொருட்களாக பயன்படுத்தப்படும் கிறீம் வகைகள் உள்ளடங்கப்படுவது தொடர்பாகவும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையான செயற்பாடுகளை இலங்கை சுகாதார திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் அனுசரணையுடன் மண்முனை வடக்கு சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு சுகாதார மருத்துவ அதிகாரி வைத்திய கலாநிதி இளையதம்பி உதயகுமார் தலைமையில் இது தொடர்பான விழிப்புணர்வு செயலர்வொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலையான வின்சன்ட் உயர்தர மகளிர் பாடசாலையில் குறித்த விழிப்புணர்வு செயலர்வானது இடம்பெற்றது.
இதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தோல் வைத்திய நிபுணர் வைத்தியர் தனுஜா வாலேந்திரன், குறித்த பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்களான வைத்தியர்கள் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் வைத்தியர்கள் உள்ளட்டோர் குறித்த விழிப்புணர்வு செயலமர்வில் கலந்துகொண்டு விழிப்புணர்வை வழங்கியிருந்தனர்.
இதன்போது சருமத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் அளகு சாதன பொருட்களான கிறீம் வகைகளினால் ஏற்படும் பாதகத் தன்மைகள் தொடர்பாக மாணவர்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டதுடன், அவற்றினை தவிர்த்து இயற்கை முறையில் சருமத்தினை பேணுவது எப்படி என்பது தொடர்பான விளக்கங்களும் இதன்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்வில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வி சாரா ஊழியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.


