எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
பாடசாலை மட்டத்திலான சிறுவர் பாதுகாப்பு குழுக்களை பதிவு செய்த பாடசாலைகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி நிஸா றியாஸின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (09) இன்று இடம்பெற்றது.
பாடசாலை மட்டத்திலான சிறுவர் பாதுகாப்பு குழுக்களை அமைத்து சிறுவர் பாதுகாப்பு தர நியமங்களை அடைந்த பாடசாலைகளை கல்வி அமைச்சும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் இணைந்து மதிப்பீடு செய்து சிறுவர் பாதுகாப்பில் சிறந்த நியமங்களை பெற்ற பாடசாலைகளுக்கான சான்றிதழ்கள் இன்று வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இதன் போது தர நியமங்களுக்கு அமைவாக புள்ளிகளின் அடிப்படையில் 30 பாடசாலைகள் மூன்று பச்சை நிற குறிகாட்டிகளை பெற்றுள்ளதுடன் 07 பாடசாலைகள் இரண்டு மஞ்சள் நிற குறிகாட்டிகளையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது சுற்று நிருபங்களுக்கு அமைவாக செயற்பட்ட அதிபர்களுக்கு அரசாங்க அதிபர் பாராட்டுக்களை தெரிவித்ததுடன் பாடசாலைகளில் இடம் பெறும் இடை விலகல்களை தடுப்பதற்கு அதிபர்கள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் மாவட்டத்தில் சிறந்த கல்வி சமூகத்தை மேம்படுத்துவதற்கான சேவை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஶ்ரீகாந்த், மட்டக்களப்பு வலய பிரதி கல்வி பணிப்பாளர்களான திருமதி சாமினி, பட்டிருப்பு வலயம் பிரதி கல்வி பணிப்பாளர் சுரேஷ், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் யசோதரன், மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் ஏ. பிரபாகர், பாடசாலை அதிபர்கள் பகுதி தலைவர்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.


