கல்முனையில் இரு பிரதேச செயலகங்களுக்கும் ஒரு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனையில் உள்ள கல்முனை பிரதேச செயலகம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் ஆகிய இரு செயலகங்களுக்கும் பொதுவாக ஒரு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை நடாத்த அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேயவிக்கிரம அறிவித்தல் விடுத்துள்ளார்.

குறித்த கூட்டம் எதிர்வரும் 18 ஆம் தேதி கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனையில் நடாத்த அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக ஏற்பாடு செய்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகரவின் வழிகாட்டலில் கூட்டம் எதிர்வரும் பதினெட்டாம் தேதி காலை 9:30 மணிக்கு நடைபெற உள்ளது .

கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு வலுவூட்டல் பிரதி அமைச்சரும் கல்முனை உப பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் கல்முனை பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா ஆகியோர் தலைமை தாங்க இருக்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இது குறித்து தமிழ் மக்கள் தரப்பில் பாரிய எதிர்ப்பும் கண்டனமும் எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.