எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கிராம புரங்களில் சிறுவர் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் 13 முன்பள்ளி (பாலர்) பாடசாலைகளைப் பராமரித்து வரும் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பின் பிரதிநிதிகள் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனை அன்மையில் மாவட்ட செயலகத்தில் வைத்து சந்திப்பொன்றினை மேற்கொண்டார்கள் .
நாட்டில் யாழ்ப்பாணம், களுத்துறை, இரத்தினபுரி, மன்னார் மட்டக்களப்பு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 67 முன்பள்ளி பாடசாலைகளை பராமரித்து வரும் FACE என அழைக்கப்படும் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பானது பின்தங்கிய கிராமப்புறங்களில் உள்ள பாலர் பாடசாலைகளைத் தெரிவு செய்து இங்கு கல்வி பயிலும் பாலர்களுக்கான சத்துணவு, சீருடை, கற்றல் உபகரணங்கள் போன்றவற்றை வழங்குவதுடன் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான மாதாந்த சம்பளம் களையும் வழங்கி வருகிறது.
இதனடிப்படையில் இம்மாவட்டத்தில் கதிரவெளி பிரதேசத்திலுள்ள கல்லரிப்பு, கிரான் பிரதேசத்தில் உள்ள கூழாவடி, சித்தாண்டி பிரதேசத்திலுள்ள இலுக்குப் பொத்தானை, ஈரளக்குளம், வாகரைப் பிரதேசத்தில் உள்ள ஊரியன்கட்டு, செங்கலடி பிரதேசத்தில் உள்ள பால்சேனை, கரடியணாறு மற்றும் உன்னிச்சைப் பிரதேசத்திலுள்ள இருநூறுவில், நெடுஞ்சேனை, பொன்னாங்கண்ணி தோட்டம், பன்சேனை உட்பட வாகனேரி பிரதேசத்திலுள்ள குடாமுனை, துருசியடி வீதி ஆகிய கிராமங்களிலும் 13 பாலர் பாடசாலை களில் உள்ள 337 பாலர்களுக்கான சீருடை, போசாக்குணவு, கற்றல் உபகரணங்கள் வழங்கப்படுவதுடன், 22 பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்குமான ஊதியங்களையும் இவ்வமைப்பு வழங்கி வருகிறது.
இவ்வமைப்பின் கல்வி செயற்பாட்டிற்கு நிதி அனுசரணையில் கனடா, லண்டன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், நோர்வே போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சகோதரர்கள் வழங்கி வருவதுடன், அமைப்பினூடாக இன பேதமின்றி தமிழ், சிங்கள, முஸ்லிம் பிரதேச பாலர் பாடசாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மாவட்ட அரசாங்க அதிபருடனான இச்சந்திப்பில் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பின் செயலாளர் ரீ. கிருபாகரன், அமைப்பின் செயற்பாட்டாளர் களான புவனசுந்தரம், எப். பிரேமநாத், எம். அனிந்திரை ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இக்குழுவானது மாவட்ட ஊடகப் பிரிவிற்கும் சினேகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தது விசேட அம்சமாகும்.


