(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
நிந்தவூர் அல் – அஷ்றக் தேசிய பாடசாலை ஸ்தாபிக்கப்பட்டு செப்டம்பர் முதலாம் திகதி முதல் 79 வருடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு, 80ஆவது வருடத்தில் காலடி வைக்கின்றது.
01.09.1946ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிந்தவூர் அல் – அஷ்றக் பாடசாலை இவ் 79 வருட காலப்பகுதியினுள் பாடவிதான, இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சாதனை படைத்து இன்று இலங்கையில் மட்டுமின்றி சர்வதேச ரீதியிலும் பேசப்படும் ஒரு பாடசாலையாக மிளிர்கின்றது.
இப் பாடசாலையின் 79ஆவது ஸ்தாபகர் தின நிகழ்வுகள் விசேட காலை ஆராதனையின் போது கல்லூரி முதல்வர் ஏ. அப்துல் கபூர் தலைமையில் ஆரம்பமாகின. பிரதி அதிபர் ஏ. முஹம்மட் ஹில்மியின் வரவேற்புரையைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் ஏ. அப்துல் கபூரின் தலைமையுரை இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஸ்தாபகர் தின விசேட உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்த இப் பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் கே.எல். நூர் முஹம்மதினால் ஆரம்பம் முதல் இன்றுவரை பாடசாலையின் சரித்திரம் மாணவர்களுக்கு சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டதோடு, பாடசாலையின் வரலாற்றை விளக்கும் ஆவணக் காணொளியும் காண்பிக்கப்பட்டது.
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், ஏனைய ஆளணியினர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்ட இந் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் (SDEC) செயலாளர் டாக்டர் ஐ.எல்.எம். ஸாஹிர், பழைய மாணவர் சங்க (PPA) உபதலைவர் ஏ.எல்.எம். பாயிஸ், செயலாளர் பொறியியலாளர் எம்.எஸ். ஆஷிக் அஹமட், உப செயலாளர் எம்.ஆர்.எம். சிபான் நிர்வாககுழு உறுப்பினர்களான யூ.எல்.முபீத், எம்.பி.ஏ. ஹக்கீம், எம்.எல்.எம். இபாஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலை வரலாறு சம்பந்தமாக வினாவப்பட்ட வினாக்களுக்கு சரியாக விடையளித்த மாணவர்களுக்கு விசேட பரிசில்கள் வழங்கப்பட்டதோடு, இறுதியாக ஹில்மாஸ் லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினால் இனிப்பும் பழைய மாணவர் அமைப்பினால் குளிபானமும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
மேலும் 79ஆவது ஆண்டு நிறைவைத் தொடர்ந்து 80ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இப்பாடசாலையின் 80ஆவது ஆண்டுக்கான 80 நிகழ்வுகள் என்னும் தொனிப்பொருளுடனான அமுத விழா நோக்கி என்னும் பதாதை பழைய மாணவர் அமைப்பினால் காட்சிப்படுத்தப்பட்டதுடன் பாடசாலை முகப்பின்னூடாகப் பயணித்த அனைவருக்கும் தாகசாந்தியும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


