அருள்மிகு ஸ்ரீ மூஷிக விநாயகர் ஆலய கும்பாபிஷேக ஒரு வருட பூர்த்தி ஆவணி சதுர்த்தி பெருவிழா – 2025

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக வளாக அருள்மிகு ஸ்ரீ மூஷிக விநாயகர் ஆலய கும்பாபிஷேக ஒரு வருட பூர்த்தி ஆவணி சதுர்த்தி பெருவிழா – 2025 இன்று வெகு விமர்சையாக இடம் பெற்றது.

புதிய மாவட்ட செயலக வளாகத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ மூஷிக விநாயகப் பெருமானுக்கு ஒரு வருட கும்பாபிஷேக பூர்த்தி தின ஆவணி விநாயகர் சதுர்த்தி பெருவிழாவானது இன்று 27.08.2025 திகதி புதன்கிழமை சுப முகூர்த்த வேளையாகிய பகல் 12.00 மணியளவில் 108 சங்குகளினால் விநாயகப் பெருமானுக்கு சங்காபிஷேகம் இடம் பெற்றது.

காலை 9.00 மணி முதல் விஷேட கிரியை ஹோம வழிபாடு ஆரம்பமாகி 108 சங்குகளினால் மூல மூர்த்திக்கு அபிஷேகம் இடம் பெற்று அதனைத் தொடர்ந்து செயலக உத்தியோகத்தர்களின் பஜனை வழிபாடும், அதனைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விஷேட அலங்கார பூசை என்பன இடம் பெற்று நிறைவில் அடியார்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு, மகேஸ்வரப் பூசை என்கின்ற அன்னதானமும் வழங்கப்பட்டது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உ.ஜெகதீஸ்வரக் குருக்கள் அவர்களது ஏற்பாட்டில் சங்காபிஷேக பிரதம குருவான இந்து குருமார் ஒன்றியத்தின் முன்னால் தலைவர் பிரம்மஸ்ரீ காசுபதீஸ்வரக் குருக்கள் தலைமையில் சங்காபிஷேக நிகழ்வுகள் அனைத்தும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் அவர்களது சேவையினை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மாவட்ட செயலகத்தை அண்டிய பகுதிகளில் உள்ள அறநெறிப் பாடசாலைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றும் அறநெறி ஆசிரியர்களும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.