பாறுக் ஷிஹான்
வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பணப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த இளைஞனை கல்முனை தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று இடம்பெற்றதுடன் தொலைந்த பணப்பை மீட்கப்பட்டு பொலிஸார் முன்னிலையில் உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது
அரபு நாடு ஒன்றில் இருந்து தொழில் நிமிர்த்தம் விடுமுறையில் நாடு திரும்பிய நாவிதன்வெளி பகுதியை சேர்ந்த இளைஞன் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சந்தைக்கு சென்ற நிலையில் பணப்பை ஒன்றினை வீதியில் கண்டெடுத்துள்ளார். பின்னர் குறித்த இளைஞன் வீதியில் இருந்து கண்டெடுத்த குறித்த பணப்பையை எடுத்துக்கொண்டு தனது வீட்டுக்கு சென்று ஆராய்ந்து அப்பணப்பையில் இருந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தன்னிடம் பணப்பை இருப்பதாகவும் அதனை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வந்து தவறிய உங்கள் பணப்பையை பெற்றுக்கொள்ள வருமாறும் கூறியுள்ளார்.
அத்துடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த குறித்த பணப்பையை கண்டெடுத்த அவ்விளைஞன் பொலிஸாரை சந்தித்து பணப்பையை தவறவிட்ட உரிய நபரிடம் பணப்பையை ஒப்படைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரை கோரியுள்ளார். குறித்த இப்பணப்பையில் குறித்த ஒரு தொகை பணம் உட்பட சாரதி அனுமதி பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் உள்ளடங்கி இருந்தன.இதே வேளை தனது பணப்பை தொலைத்த நபரும் மன உளைச்சலுக்கு உள்ளாகிய நிலையில் முறைப்பாடு வழங்கவதற்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் தான் தொலைபேசி வாயிலாக பணப்பையை தவறவிடப்பட்ட நபருக்கு அப்பணப்பையை கண்டெடுத்த இளைஞன் அழைப்பு ஏற்படுத்தி மீட்கப்பட்ட பணப்பை தொடர்பில் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தவறவிடப்பட்ட பணப்பையை மீண்டும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வந்து பெற்றுக் கொண்டவர் மருதமுனை பகுதியை சேர்ந்த அன்றாடம் இடியப்ப விற்பனையில் ஈடுபடும் நபராவார். மிக சிரமத்துடன் வாழ்வாதாரத்தை நடத்தி செல்வதாக குறிப்பிட்ட அவர் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் வசிப்பதுடன் தனது பணப்பையானது கல்முனை சந்தைக்கு பொருள் கொள்வனவிற்காக சென்ற போது தவறவிடப்பட்டிருந்ததாக குறிப்பிட்டார்.
இந்நிலையில் பணப்பை தவறவிடப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தநபர் இறைவன் தான் பார்த்து அந்த இளைஞனை அனுப்பி எனது பணப்பையை மீட்டுக்கொடுத்துள்ளதாக குறிப்பிட்டார். இக்காலகட்டத்தில் பொருளாதார பிரச்சினைகளுக்கு உள்ளாகி இருக்கும் இளைஞர்கள் மத்தியில் மனிதாபிமானம் உள்ள இவ்இளைஞனை போன்றவர்கள் இருப்பதை நினைத்து பெருமை கொள்வதாக அவர் நன்றிகளை தெரிவித்தார்.
மேலும் பணப்பை காணாமல் போன உரிமையாளர் என குறிப்பிடப்பட்ட நபர் பொலிஸார் முன்னிலையில் தான் கொண்டு வந்த ஆதாரங்களை சமர்ப்பித்திருந்ததை அடுத்து கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.எம் இப்னு அசார் வழிநடத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மற்றும் நிர்வாகப்பிரிவு உள்ளிட்ட பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் முன்னிலையில் காணாமல் போன பணப்பை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் தவறவிடப்பட்ட பணப்பையை பொலிஸார் முன்னிலையில் உரிமையாளிடம் ஒப்படைக்க முயற்சி செய்த அரபு நாட்டில் இருந்து தொழில் நிமிர்த்தம் விடுமுறையில் நாடு திரும்பிய நாவிதன்வெளி பகுதியை சேர்ந்த இளைஞன் பொலிஸாரால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


