(சுமன்)
வடகிழக்கில் அதீத இராணுவ பிரசன்னம் மற்றும் பொறுப்புக்கூறல் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசு பின் நிற்கின்ற விடயத்திற்கு எதிராகவும் முத்தையன் கட்டு இராணுவத்தால் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் இளைஞனுக்கும் நாங்கள் நீதி கோருகின்றோம்.
இந்த ஹர்த்தால் அரசுக்கு சிவப்பு எச்சரிக்கையாக அமையும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி துணைச் செயலாளரும், கல்முனைத் தொகுதி தலைவருமான சட்டத்தரணி அ.நிதான்சன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடகிழக்கில் தமிழ் பேசும் சமூகம் இந்த அரசினை நம்பி பாராளுமன்றத் தேர்தலில் பெருவாரியான ஆதரவினை வழங்கிய போதும் உள்ளூராட்சி சபை தேர்தலில் வடகிழக்கில் பலத்த அடியை வழங்கி இருந்தது. இருப்பினும் அரசு தொடர்ந்து மந்தபோக்காக தமிழர் பிரச்சினையை கையாள்வதற்கு எதிரான ஹர்த்தால் நாளை வலுவான எதிர்ப்பாக அமையும் இது அரசுக்கு தமிழ் பேசும் சமூகத்தின் சிவப்பு எச்சரிக்கை ஆகும்.
கடந்த ஆட்சியாளரான கோட்டாபாய ராஜபக்ச வீட்டுக்கு அனுப்ப முதலில் களம் இறங்கியது இலங்கை தமிழ் அரசுக் கட்சிதான் அந்த வலுவான எதிர்ப்பு பொத்துவில் முதல் பொலிகண்டி வரை எதிரொலித்தது.
அதே நிலையை இந்த அரசும் ஏற்படுத்தா வண்ணம் நடக்க வேண்டும் எனும் நோக்கில் இந்த ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.தோண்டப்படுகின்ற அனைத்து புதைகுழிகளுக்கும் நீதி வேண்டும்.
இந்த அரசுக்கு பலத்த எதிர்ப்பினை நாளை வெளிகாட்டவும் எங்கள் அபிலாசைகளில் அரசின் மந்தகதியான செயல்பாட்டுக்கு பதிலடி வழங்கவும் அனைவரும் ஒன்றாக அமைதியான முறையில் வர்த்தக நிலையங்களை மூடி போக்குவரத்தை தவிர்த்து முழுமையாக பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்க ஆதரவு வழங்க வேண்டும் என கோருகின்றோம் என்று தெரிவித்தார்.


