ஹஸ்பர் ஏ.எச்_
பெண்களை வலுவூட்டும் திட்டத்தின் கீழ் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் வதியும் 10 குடும்பங்களுக்கு குழாய்க் கிணறு அமைப்பதற்கான குழாய்கள், நீர் கொண்டு செல்லும் குழாய்கள்,தூவல் நீர்ப்பாசன கருவிகள், நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட அண்ணளவாக 30 இலட்சம் பெறுமதியான விவசாயக் கருவிகள் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தினால் இன்று (22) வழங்கப்பட்டன.
குறித்த உபகரணங்களை திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் தலைவரான கணபதிப்பிள்ளை சிவானந்தன், செயலாளரான வினோதா விஜயராசா மற்றும் பொருளாளரான இராசரத்தினம் கோகுலதாசன் உள்ளிட்டோர்கள் இணைந்து வழங்கி வைத்தனர்.
குறித்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுத்து செல்ல இத் திட்டம் மூலம் நன்மையடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


