மூதூர் உள்ளூராட்சி சபை நகர சபையாக தரமுயர்த்தப்படுவதோடு,அதனோடு இணைந்த புதியதொரு உள்ளூராட்சி மன்றம் உருவாக்கப்பட வேண்டு

— ஹஸ்பர் ஏ.எச்

மூதூர் உள்ளூராட்சி சபை நகர சபையாக தரமுயர்த்தப்படுவதோடு,அதனோடு இணைந்த புதியதொரு உள்ளூராட்சி மன்றம் உருவாக்கப்பட வேண்டுமென முன்னால் மூதூர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அதிஉயர்பீட உறுப்பினருமான அமீர் சுல்தான் தாணீஸ் தெரிவித்தார்.

சனத்தொகை அதிகரிப்பும்,மக்களுக்ககான தேவைகள் அதிகரிப்பும் காரணமாக மக்களுடைய அபிவிருத்தி மற்றும் அத்தியவசிய தேவைகள் உடனடியாக நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் புதிய உள்ளூராட்சி மன்ற உருவாக்கத்தின் தேவை உணரப்பட்டுள்ளதாக இன்று ( 17 )திருகோணமலை சர்வோதயத்தில் நடைபெற்ற மாவட்ட சிவில் அமைப்புக்களின் ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போதுள்ள அரசாங்கம் நாட்டில் மக்களுக்கான உரிமைசார், அபிவிருத்திசார் பிரச்சினைகளையும் உடனடியாக தீர்த்து வைப்பதில் கரிசனை கொண்டுள்ளதோடு பிராந்தியத்தில் வாழ்கின்ற மக்களின் இன நல்லுறவை பாதிக்காத வகையியில் செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் அதிக சனத்தொகையையும்,வாக்காளர்களையும்,13 வட்டாரங்களையும், 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் கொண்ட தமிழ்,முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் உள்ளூராட்சி மன்றமாக மூதூர் பிரதேச சபை உள்ளது.

எனவே எமது மக்களின் தேவைகள் உனரப்பட்டு அதற்கான தீர்வாக அங்கு வாழும் மக்களோடும்,கட்சிகளோடும் சிறந்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுவதோடு நியாயமான தீர்வாக புதிய உள்ளூராட்சி மன்ற தரமுயர்வும்,புதிய உள்ளூராட்சி உருவாக்கமும் புதிய அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படல் வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.