2026 முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் குறித்து மாகாண, வலயம் மற்றும் பிரதேச மட்டங்களில் கல்வி மற்றும் நிர்வாக அதிகாரிகளை விழிப்புணர்வு செய்யும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடல் தொடரின் கிழக்கு மாகாணக் கலந்துரையாடல்,இன்று( 13 ) பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில்,
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர,
வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர,
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ரொஷான் அக்மீமன, மற்றும் சண்முகம் குகதாசன் ஆகியோர் மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்,மாகாண பிரதம செயலாளர்,மாகாண கல்வி பணிப்பாளர் உட்பட உயர் அதிகாரிகள் என பலரும்
பங்குபற்றினர்.
இந்நிகழ்வின் போது, தற்போது நடைமுறையில் உள்ள கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என்றும், பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார். ஆசிரியர்கள்,அதிபர்கள் மற்றும் கல்வி நிர்வாகத்தில் காணப்படும் வெற்றிடங்கள் தொடர்பாக சிக்கல்கள் இருப்பதும், அவற்றை தீர்க்க வேண்டியதும் குறிப்பிடப்பட்டது. கல்விச் சீர்திருத்தத்தை தனிப்பட்ட செயல் என அல்லாமல் ஒரு முழுமையான செயல் முறையாக பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
புதிய சீர்திருத்தத்தை வெற்றிகரமாக செயல்படுத்த ஆசிரியர்கள் மட்டுமின்றி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அவர் கூறினார்.
மேலும் இக்கலந்துரையாடலில் முக்கியமாக:
பாடத்திட்ட சீரமைப்பு,
மதிப்பீட்டு மற்றும் பரீட்சை நடைமுறை,
அடிப்படை வசதிகளின் மேம்பாடு,
வெற்றிடங்கள்,
மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு
மாகாண மட்டத்தில் உள்ள பிரச்சனைகளை புரிந்து கொண்டு அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்கல்
என்ற விடயங்கள் பற்றியும் மேலும் கலந்துரையாடப்பட்டது.
—


