பேசாலையில் பிரதேச சபை அதிக வருமானத்தை பெரக்கூடிய வாயப்பு உள்ளது

( வாஸ் கூஞ்ஞ) 10.07.2025

மன்னார் மாவட்டத்தில் சனத் தொகையில் அதிகரித்துள்ள கிராமங்களில் பேசாலை பகுதியும் ஒன்றாகும். ஆனால் இங்கு அடிப்படை வசதிகள் அற்ற நிலையாகவே தொடர்ந்து காணப்பட்டு வருவதாக மன்னார் பிரதேச சபை உறுப்பினர் திருமதி லூட்ஸ் ஒல்வியா பீரீஸ் இவ்வாறு தெரிவித்தார்.

மூன்றாவது மன்னார் பிரதேச சபையின் அமர்வு புதன்கிழமை (09.07) இதன் தவிசாளர் அப்துல் ஜபார் முகமட் ஜப்ரான் தலைமையில் அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.

இந்த சபையில் 22 உறுப்பினர்கள் இருக்கின்றமோதும் இந்த அமர்வில் 21 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொள்ளாத சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அவசர பிரயாணம் ஒன்றை மேற்கொண்டமையால் இதில் கலந்துகொள்ள முடியவில்லையென தெரிவிக்கப்பட்டது.

இந்த அமர்வு ஒரு அறிமுக அமர்வு எனவும் தங்கள் கன்னி உரையை ஆற்றலாம் என தலைவரால் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது மன்னார் பிரதேச சபை உறுப்பினர் திருமதி லூட்ஸ் ஒல்வியா பீரீஸ் உரையாற்றும்போது பேசாலை பகுதி மன்னார் மாவட்டத்தில் ஒரு பரந்த இடமாகவும் சனத் தொகை அதிகரிப்பு இடமாகவும் காணப்படுவதுடன் பெருந்தொகையான மக்கள் பொருட்களை நுகர்வு செய்யவும் போக்குவரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் இங்கு சரியான சந்தை கட்டிடம் இல்லாமையால் தெருக்களிலேயே பொருட்களை விற்பனை செய்யும் நிலை இருந்து வருகின்றது.

அத்துடன் பஸ் நிலையம் மற்றும் பொது மலசலக்கூடம் இல்லாதக் குறையும் இங்கு காணப்படுவதால் பொது மக்கள் பெரும் அசௌரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

பேசாலை நகரின் மத்தியில் மீன்பிடி இலாகாவுக்கும் ரயில்வே திணைக்களத்துக்கும் சொந்தமான வெற்றுக் காணிகள் காணப்படுவதால் இவற்றை 99 வருடக் குத்தைகளுக்குப் பெற்று இந்த குறைகளை நிவர்த்தி செய்யும் வாயப்பும் உண்டு

அத்துடன் இதன் மூலம் மன்னார் பிரதேச சபை அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய வாயப்புக்களும் இருக்கின்றது. ஆகவே இதற்கான நடவடிக்கையை இந்த சபை முன்னெடுக்க வேண்டும் என தனது கன்னி உரையில் சபை உறுப்பினர் திருமதி லூட்ஸ் ஒல்வியா பீரீஸ் இவ்வாறு தெரிவித்தார்.