யாழ் பல்கலையில் நடைபெற்ற அனைத்துலக தமிழ் பண்பாட்டு மகாநாடு!

இரா.துரைரத்தினம் )
உலகளாவிய ரீதியில் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அனைத்துலக தமிழ் பண்பாட்டு மகாநாடு திங்கட்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடாதிபதி பிரம்மஸ்ரீ ச. பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.

மாநாட்டிற்கான ஏற்பாடுகளை யாழ் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறையுடன் இணைந்து தஞ்சாவூர் அனைத்துலக பண்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு திருநெறி தமிழ் சைவ சமய பாதுகாப்புப்பேரவை, இலண்டன் தமிழ் கல்வியகம், இலண்டன் உலகச் செம்மொழித்தமிழ் சங்கம் பிரான்ஸ் இந்திய வம்சாவளி மக்களுக்கான அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

சுவிட்சர்லாந்து, கனடா, இங்கிலாந்து, நோர்வே, ஜேர்மனி, பிரான்ஸ் மலேசியா சிங்கப்பூர், ரீயூனியன் தீவுகள், தென்ஆபிரிக்கா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி சி.சற்குணராசா அவர்கள் கலந்து கொண்டார்.

கௌரவ விருந்தினர்களாக இந்திய தூதுவர் எஸ்.சிறி சாய் முரளி , வடமாகாண பிரதம செயலாளர் தனுசா முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வரவேற்புரையை யாழ். பல்கலைக்கழக இந்துநாகரீக துறைத்தலைவர் பேராசிரியர் திருமதி விக்னேஸ்வரி பவநேசன் அவர்கள் நிகழ்த்தினார்.

மாநாட்டின் நோக்கவுரையை மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் க.பாஸ்கரன் அவர்களும் வாழ்த்துரையை கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களும் வழங்கினர்.

இம்மாநாட்டில் பேராசிரியர் சிவலிங்கராசா, பேராசிரியர் வேதநாதன், கலாநிதி ஆறு திருமுருகன் அறிஞர்கள் கலைஞர்கள், துறைசார் வல்லுனர்கள் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர்கள், உலக சாதனை செம்மல் விருது, இளம் கலைஞர்கள் எழுத்தாளர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டது.

சிறப்பு நிகழ்ச்சியாக கலைமாமணி கலாநிதி சாம்பசிவசோமாஸ்கந்தசர்மா அவர்கள் வழங்கிய வள்ளிதிருமணம் வில்லிசை நிகழ்ச்சியும் இடம் பெற்றது.