மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா மற்றும் விவேகனந்தா மகளிர் கல்லூரிகளின் பழைய மாணவர் அமைப்பான S.V.S.A யினால் ஒழுங்கு செய்யப்பட்ட கண்பரிசோதனை முகாம் இன்று 2025.06.27 திகதி கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

பிரபல கண் சந்திர சிகிச்சை நிபுணர் பூ.ஶ்ரீகரநாதன் தலைமையில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமிற்கு மட்டக்களப்பு விசன் கெயர் நிறுவனத்தினரும் இணை அனுசரனை வழங்கியிருந்தனர்.

S.V.S.A அமைப்பானது மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி மற்றும் மட்/ கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலைகளில் கல்வி கற்று 1988 ம் ஆண்டு G.C.E O/L மற்றும் 1991 ம் ஆண்டு G.C.E A/L எழுதிய மாணவர்கள் இணைந்து கல்லடி பிரதேசத்திற்குட்பட்ட மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகவே இவ்வமைப்பு இயங்கிவருகின்றது.

அந்த வகையில் இவ்வமைப்பின் செயற்றிட்டங்களில் ஒன்றாக இலவச கண் பரிசோதனை முகாம் 2018 ஆண்டு முதல் ஒவ்வெரு வருடமும் தரம் 2 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கு நடாத்தப்பட்டு வருகின்றது.

இவ் வருடம் கல்லடி முதல் மஞ்சந்தொடுவாய் வரையுள்ள பாடசாலைகளில் தரம் 2 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான கண் பரிசோதனை முகாம் மட்/கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் நடாத்தப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் குறித்த அமைப்பால் நடாத்தப்படுகின்ற கண் பரிசோதனையின் போது.
சுமார் 10% – 15% வரையான கண் பார்வை குறைபாடுள்ள மாணவர்கள் அடையாளங்காணப்படுவதுடன் அவர்களுக்கான ஆரம்ப மற்றும் தொடர் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகள் மற்றும் வழி காட்டுதல்கள் வழங்கப்படுகின்றது.

மேலும் தற்காலத்தில் கைத்தொலைபேசி பாவனை, கணினி பாவனை என்பன வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் குறுந்தூர கண் பார்வை குறைபாடும் சமூகத்தில் அதிகரித்துள்ளது. இந் நிலையில் கண்ணில் காணப்படும் குறைபாடுகளை அடையாளம் கண்டு அதனை குணப்படுத்தக் கூடிய வயதான 7-8 வயது காணப்படுவதுடன் அவ் வயது பிரிவினருக்காகவே குறித்த கண்பரிசோதனை நடாத்தப்பட்டு வருகின்றது.

இதனால் எதிர்காலத்தில் கண்ணில் பார்வைக்குறைபாடு மற்றும் ஏனைய பிரச்சினைகள் வருவதை மாணவர்களிடையே வெகுவாக குறைக்க முடியும்.

இந் நிகழ்வில் 10 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டதுடன் SVSA அமைப்பின் உறுப்பினர்கள், புலம்பெயர் நாட்டில் வசித்துவரும் உறுப்பினரான ரீ.சஞ்சீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பான முறையில் இலவச கண் பரிசோதனையினை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.