தமிழக அரசிடமிருந்து ‘சிறந்த அயல்நாட்டுத் தமிழறிஞர்’ விருது பெற்ற முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் எழுதிய இராவண இரகசியம் சொன்ன திரிசடை ,GLIMPSES of KAMBA RAMAYANAM ஆகிய இரு நூல்களின் அறிமுகவிழா சுவிஸ்ட்ஸர்லாந்து சூரிச் Dürnten ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் சிவத்தமிழ் காவலர் ஆறுமுகம் செந்தில்நாதன் தலைமையில் சிவஶ்ரீ வை. பாலசுந்தரக்குருக்களின் ஆசியுரையுடன் வெள்ளிக்கிழமை(20.06.2025) அன்று இடம்பெற்றது.
Dürnten ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய பிரதம குரு சிவஶ்ரீ ஜெகநாத பாலகாந்தக்குருக்கள்,முருகசிரோன்மணி வேலுப்பிள்ளை கணேசகுமார் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் முதற்பிரதியினை மூத்த ஊடகவியலாளர் ஞானசுந்தரம் குகநாதன் பெற்றுக்கொண்டார்.
நூலாசிரியர் பற்றிக்குறிப்பிடுகையில் சிட்னியைச் சேர்ந்த வழக்கறிஞர், சமூகத் தலைவர் , பேச்சாளர் மற்றும் விருது பெற்ற நூல்கள் பல படைத்தவர் . தமிழ் இலக்கியம், சட்டம், ஊடகம் ,தலைமைத்துவம், மேலாண்மை , பெண்கள் மேம்பாடு மற்றும் கவிதை ஆகியவற்றை உள்ளடக்கிய 65 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும், நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி கட்டுரைகளையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
ஊடகம் மற்றும் தமிழில் இரட்டை முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ள இவர் முதுகலை சட்டம் மற்றும் முது கலை நிர்வாகம் தகுதிகளும் பெற்று இந்தியா, மலேசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் கல்வியாளராகவும் இருந்து வருகின்றார்.
ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றி வரும் தமிழ் வளர்ச்சி மன்றத்தின் நிறுவனர். இவரது முயற்சியால் சிட்னியில் பொதுப் பூங்காவில் கருங்கல் திருவள்ளுவர் சிலையை நிறுவியது சிறப்பாகும்.
மேற்கு சிட்னி சுகாதாரத் துறை, சிட்வெஸ்ட் பன்முக கலாச்சார சேவைகள் மற்றும் பல ஆஸ்திரேலிய சமூக நிறுவனங்களில் ஆட்சி குழுக்களில் இயக்குநராக பணியாற்றுகிறார்.
ஆஸ்திரேலிய சட்டம் மற்றும் சமூகத்திற்கான இவரது சிறந்த பங்களிப்புகாக ஆஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து பிரதமரின் பதக்கம் உட்பட ஐந்து மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார் .
இவரது படைப்புகளான ‘ஊடக சட்டங்கள், இணைய சட்டங்கள் மற்றும் பெண்கள் மற்றும் ஊடகம் குறித்த மூன்று நூல்களுக்கு தமிழக அரசு மற்றும் எஸ் ஆர் எம் தமிழ்ப்பேராயம் வழங்கிய சிறந்த நூல் விருதுகளை பெற்ற பெருமை பெற்றவர்.
புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கான சிறார் இலக்கியத்திற்கான அவரது பங்களிப்புகளுக்கு அப்பால், அவரது ‘திருக்குறள்’ மற்றும் ‘கம்ப ராமாயணம்’ ஆங்கில மொழிபெயர்ப்புகள் பாராட்டப்பட்டுள்ளன.







